ஒரே ஒரு பிரஸ்மீட்.. ஆட்டம் குளோஸ்.. இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர் இனி நடக்க வாய்ப்பு இல்லை
டாக்கா: 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அணி வங்கதேசம் சென்று கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது குறித்து சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் இருந்து அளித்த பேட்டியால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த தொடர் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.
முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்து வசித்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த வங்கதேச கலவரத்தின் போது அவர் உயிர் தப்பி இந்தியாவுக்கு வந்தார். அதன்பின் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஷேக் ஹசீனா மீது வங்கதேசத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவர் இந்தியாவில் இருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஷேக் ஹசீனா புதுடெல்லியில் இருந்து ஆகஸ்ட் 5 அன்று இணையவழி வாயிலாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். இதற்கு வங்கதேச அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. "எங்கள் நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் கருத்துக்களை ஷேக் ஹசீனா டெல்லியில் இருந்து வெளியிட்டு இருக்கிறார். அதற்கு அனுமதித்துவிட்டு, இந்தியா நட்புறவை எதிர்பார்க்க முடியாது." என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது ஆகஸ்ட் 8 அன்று தெரிவித்தார்.
இந்த அரசியல் முரண்பாடுகளால் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடர் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடந்தது. அதன் பிறகு வங்கதேசம் கிரிக்கெட் வாரியத் தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் கேப்டன் தமீம் இக்பால், இந்திய அணியை வரவழைத்து இத்தொடரை நடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். நிதி ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இந்திய அணியின் வருகை வங்கதேசத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
முன்னதாக, 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரிலும் அரசியல் சூழல் காரணமாக வங்கதேசம் இந்தியா வர மறுத்தது. பின்னர் உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டது. தற்போதைய இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடர் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகி கூறுகையில், "சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு இந்த தொடர் நடப்பது சந்தேகம் தான். வரும் ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியத் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை" என்று கூறினார்.
அதிகாரப்பூர்வமாக இந்தத் தொடர் ரத்து செய்யப்படும் வரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் சிறிய நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பதற்றமான அரசியல் சூழலைப் பார்க்கும்போது, இந்திய கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதம் வங்கதேசத்திற்குப் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications

