19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மர்ம மரணம்
மும்பை: 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த ராஜேஷ் சாவந்த் மும்பையில் ஹோட்டல் அறையில் பிணமாகக் கிடந்தார்.
இன்று காலை முதல் அவர் பயிற்சிக்கு வரவில்லை. இதையடுத்து அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குப் போய்ப் பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டிக் கிடந்தது. இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு கதவு உடைத்துப் பார்த்தபோது அவர் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது.

ராஜேஷ் சாவந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் கண்டிஷனிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார் சாவந்த். கடும் மாரடைப்பால் தூக்கத்திலேயே அவர் இறந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இதில் மர்மம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே சாவந்த் எப்படி மரணமடைந்தார் என்பது தெரிய வரும். 45 வயதான சாவந்த்துக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.
இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி இந்தியா வந்துள்ளது. அந்த அணியுடனான தொடருக்கு இந்தியா யு 19 அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் சாவந்த் மரணம் வீரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications