வெறியாட்டம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி.. 2 பிரம்மாண்ட யூத் ODI ரெக்கார்டை உடைத்து சாதனை!
லண்டன்: இந்தியா அண்டர் 19 அணி, இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு எதிராக யூத் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணியில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி அதிரடி சதம் அடித்து மிரட்டினார். 79 பந்துகளில் 143 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளை உடைத்து எறிந்தார்.
இதற்கு முந்தைய மூன்று போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி இதேபோல அதிரடியாக ஆடிய நிலையில், இந்தப் போட்டியில் அதையும் தாண்டி சதம் அடித்து வியப்பை ஏற்படுத்தினார். மேலும் அவர் 13 சிக்ஸர்களை விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 183.8 என்பதாக இருந்தது. இந்த சதம் மூலம் இரண்டு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக ஆடிய இங்கிலாந்து அணி 308 ரன்கள் மட்டுமே எடுத்து 46வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 55 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட புஷ்பக், 63 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வைபவ் சூர்யவன்ஷியின் புதிய சாதனைகள்:
14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி அதிவேகமான யூத் ஒருநாள் போட்டி சதத்தை அடித்து சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த கம்ரான் குலாம் 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த யூத் ஒருநாள் போட்டியில் 53 பந்துகளில் சதம் அடித்திருந்தார். தற்போது வைபவ் சூர்யவன்சி 52 பந்துகளில் சதம் அடித்து அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.
மேலும், யூத் ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார். இந்த சதத்தை அடித்தபோது வைபவ் சூர்யவன்ஷியின் வயது 14 ஆண்டுகள் 100 நாட்களாக இருந்தது.
இதற்கு முன் வங்கதேச வீரர் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ தனது 14 வயது 241 நாட்களில் யூத் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்திருந்தால், அதை தற்போது வைபவ் சூர்யவன்ஷி முறியடித்து இருக்கிறார்.
இந்தத் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்து வரும் நிலையில், அவருக்கான எதிர்காலம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அவர் அடுத்த ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications