வரலாற்று சிறப்பு மிக்க போட்டியில் விழுந்து மீண்டு எழுந்தது ஆப்கானிஸ்தான்!
பெங்களூரு: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்று ஆரம்பத்தில் சொதப்பிய ஆப்கானிஸ்தான் பின்னர் தனது சுழற்பந்து வீச்சால் இந்தியாவை சற்றே மட்டுப்படுத்தியது.
பெங்களூருவில் நடைபெற்று வருகிறது இந்த டெஸ்ட் போட்டி. டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் களமிறங்கினர். ஷிகர் தவான் 87 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 18 பௌண்டரிகளும் , 3 சிக்ஸர்களும் அடங்கும். அவர் 107 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து முரளி விஜய் டெஸ்ட் போட்டிகளில் தனது 12ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இரண்டு முறை மழை குறுக்கே வந்த போதிலும் கூட சிறப்பாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ராகுல் சிறப்பாக விளையாடி 54 ரன்களை எடுத்தார். புஜாரா மற்றும் கேப்டன் ரஹானே முறையே 35,10 ரன்களில் ஆட்டமிழந்தனர். 8 ஆண்டுகளுக்கு பின்னர் களம் கண்ட தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
உணவு இடைவேளை வரை ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.அதன்பிறகு ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அடுத்ததடுத்து விக்கெட்களை வீழ்த்தினர். 279/1 என்ற நிலையில் இருந்து 334/6 என்ற நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 500 ரன்களை எடுக்கும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் மழைக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை கட்டுப்படுத்தினர்.

ஆரம்பத்தில் அடித்து விரட்டப்பட்ட ஆப்கான் சுழல் பந்துவீச்சு, மழைக்கு பின்பு சீரான வேகத்தில் திரும்ப தொடங்கியது. அதன் பின்னரே ரஷீத் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தனது முதல் மெய்டன் வரை வீசுவதற்கு ரஷீத் கானுக்கு 17 ஓவர்கள் தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 347ரன்கள் எடுத்தது. ஹர்டிக் பாண்டியா மற்றும் அஸ்வின்இருவரும் அட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்கள்.
நாளை மழை இல்லாத பட்சத்தில் இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் மேலும் அதிர்ச்சி அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications