இந்தூர் : இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிரான டி20 ரெக்கார்டை உடைத்த ஆப்கானிஸ்தான் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இந்திய அணி படுமோசமாக பந்து வீசியது. விக்கெட்களை எடுத்தாலும், ரன் குவிப்பை தடுக்க முடியாமல் திணறியது இந்திய அணி.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச் என்றாலும், கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரண்டாம் பாதியில் இரவு நேரத்தில் அதிக ஈரப்பதம் இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தார்.

ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் போனாலும் ரன் குவிப்பது என்ற திடத்துடன் அடித்து ஆடியது. இந்திய அணியில் அக்சர் பட்டேல் மட்டுமே கட்டுக் கோப்பாக வீசினார். அவர் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தாலும் கூட ரன்களை வாரி இறைத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் மூன்றாம் வரிசை வீரர் குலாப்தீன் நயிப் சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். நஜ்புல்லா சத்ரான் 21 பந்துகளில் 23 ரன்களும், ரஹ்மானுல்லா குர்பாஸ் 9 பந்துகளில் 14 ரன்களும் எடுத்தனர். 6 விக்கெட்கள் இழந்த நிலையில் கடைசி 3 ஓவர்களில் பேட்டிங் செய்த கரீன் ஜனத் - முஜீப் உர் ரஹ்மான் ஜோடி அதிரடியாக ரன் குவித்து ஸ்கோரை உயர்த்தியது. இந்த இடத்தில் தான் இந்தியா கோட்டை விட்டது.
19வது ஓவரில் மட்டும் இந்த ஜோடி 20 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்கள் வீழ்த்தி ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினார். 20 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு எதிராக இதுவே மிக அதிக டி20 ஸ்கோர் ஆகும். முன்னதாக நடந்த முதல் டி20யில் 158 ரன்கள் எடுத்ததே இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை இந்தப் போட்டியில் முறியடித்து இருக்கிறது அந்த அணி.