இந்தூர் : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ள இரண்டாவது டி20 போட்டிக்கான பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் இந்திய அணி அதற்கேற்ப திட்டமிட வேண்டிய நிலையில் உள்ளது. குறிப்பாக ஃபினிஷர்கள் கையில் தான் போட்டி உள்ளது. அந்த அடிப்படையில் ரிங்கு சிங்கிற்கு இந்தப் போட்டியில் கூடுதல் பொறுப்பு உள்ளது.
இந்தப் போட்டி நடைபெற உள்ள இந்தூர் மைதானத்தின் ஆடுகளம் பொதுவாகவே அதிக ரன்கள் அடிக்க ஒத்துழைக்கும். பிட்ச், அவுட்ஃபீல்டு, குறைந்த தூரம் கொண்ட பவுண்டரி லைன் என எல்லாமே பேட்டிங்கிற்கு சாதகமானவை.

அதே சமயம், விக்கெட் வீழ்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது. 20 ஓவர் போட்டி என்பதால் விக்கெட் வீழ்ச்சியை பற்றி எல்லாம் யோசிக்காமல் அதிரடி ஆட்டம் ஆடினால் இந்த பிட்ச்சில் எளிதாக 200 ரன்களை எட்டலாம் என கூறப்படுகிறது. எனவேதான், இந்திய அணி எப்படியும் 3 - 4 விக்கெட்களை இழந்தால் ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா பேட்டிங் செய்ய வருவார்கள். அவர்களின் அதிரடி ஆட்டம் போட்டியை மாற்றும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி பெற கூடுதல் வாய்ப்பு உள்ளது. முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் சேஸிங்கின் போது கடும் அழுத்தத்துடன் தான் பேட்டிங் செய்ய வேண்டும். எனவே, ரோஹித் கடந்த போட்டி போல இந்தப் போட்டியிலும் டாஸ் வெல்ல வேண்டும்.
இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட இருப்பதால் திலக் வர்மா வெளியேறலாம் என தெரிகிறது. துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா ஆடுவார்கள் என கூறப்படுகிறது. சுப்மன் கில் வெளியேற்றப்படலாம். இந்த இரண்டு மாற்றங்கள் தவிர்த்து முதல் டி20யில் களமிறங்கிய மற்ற வீரர்கள் இந்தப் போட்டியில் களமிறங்குவார்கள். முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இந்தப் ப்[போட்டியில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றலாம்.