IND vs AFG: இந்திய அணியில் மற்றொரு பந்துவீச்சாளர்.. காயத்தில் இருந்து மீண்ட ஹர்ஷித் ராணா சேர்ப்பு
சென்னை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்ததை அடுத்து அவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஹர்ஷித் ராணாவின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் 2026 தொடர் முழுவதையும் தவறவிட்டார். ஐபிஎல் தொடரில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வேண்டியிருந்தது. அந்த வாய்ப்பையும் அவர் தவறவிட்டார்.

இந்நிலையில், பிசிசிஐ சிறந்த செயல்பாட்டு மையத்தில் தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்த அவர், தற்போது சென்னையில் உள்ள இந்திய ஒருநாள் அணியுடன் இணைந்துள்ளார். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. அந்தப் போட்டிக்கான அணியில் ஹர்ஷித் ராணா இணைந்துள்ளார். அவருக்கு பிளேயிங் 11-இல் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ஹர்ஷித் ராணா இதுவரை இந்தியாவுக்காக 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 27.38 ஆகவும், எகனாமி 6.21 ஆகவும் உள்ளது. கடைசியாக கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியிருந்த ராணா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார்.
மேலும், அடுத்ததாக நடைபெற உள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியிலும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்துகிறார். ஹர்ஷித் ராணா வருகை இந்திய அணியின் பந்துவீச்சை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
