பெங்களூர் : ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் நிரந்தர இடத்தை பிடித்ததால் மூத்த வீரர்கள் சிலரது இடம் பறிபோகும் நிலையில் உள்ளது. இதுவரை பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம் பெற்றால் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்காது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியை தேர்வு செய்வதில் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தீவிரமாக இருக்கும் நிலையில், ரிங்கு சிங் இவர்கள் மூவரின் விருப்பமான வீரராக மாறி இருக்கிறார். அவர் ரசிகர்களின் விருப்பமான வீரராக மாறி சில மாதங்கள் ஆகி விட்டது. ஆனால், உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்றால் இந்த மூவரின் தேர்வு மிகவும் முக்கியம்.

தற்போது நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ரிங்கு சிங் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் ஆடினார். மூன்று போட்டிகளிலும் தன்னிடம் இருந்து அணி என்ன எதிர்பார்க்கிறதோ அதை உணர்ந்து முதிர்ச்சியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரிங்கு சிங். ஒரு ஃபினிஷர், அதுவும் எப்போதும் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது முதிர்ச்சியாக நடந்து கொள்வது என்பது அதிசயமான விஷயம். அந்த வகையில் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டை ரிங்கு சிங் ஈர்த்து விட்டார்.
தற்போது டி20 அணியில் உலகக்கோப்பை பிளேயிங் லெவனில் ரிங்கு சிங் முக்கிய ஃபினிஷராக இருக்கப் போகிறார் என கூறப்படுகிறது. டி20 அணியில் ரிங்கு சிங் இடம் உறுதி செய்யப்பட்டதால் அவரை விட மூத்த வீரர்கள் சிலர் அணியில் தங்கள் வாய்ப்பை இழக்க உள்ளனர். கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ரிங்கு சிங்கால் வாய்ப்பை இழக்கப் போகும் வீரர்களில் முக்கியமானவர்கள். அவர்களைத் தவிர திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா என சமீப காலங்களில் தங்களை நிரூபித்த சில இளம் வீரர்களும் கூட அணியில் வாய்ப்பை இழக்கக் கூடும்.
அதற்கு முக்கிய காரணம், இந்திய பேட்டிங் ஆர்டரில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளனர். ஐந்து பந்துவீச்சாளர் போக மீதமுள்ள ஒரே ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடம் மட்டுமே உள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கே அணியில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.