டி20 வரலாற்றிலேயே மாபெரும் சாதனை படைத்த ரோஹித் சர்மா.. உலக அளவில் முதல் இடம்.. அதிக செஞ்சுரி
பெங்களூர் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்தார். அதன் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்த சாதனையை உடைத்து எறிந்தார் ரோஹித் சர்மா.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் கடும் அழுத்தத்துக்கு நடுவே தான் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய வந்தார். அதற்கு முந்தைய இரண்டு போட்டிகளில் அவர் டக் அவுட் ஆகி இருந்தார். அதனால் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த நிலையில், இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி தவித்தது.

அந்த சூழ்நிலையில் அபாரமாக பேட்டிங் செய்த ரோஹித், தன் அதிரடி ஆட்டத்தால் அணியை பந்தாடினார். சதம் அடித்த அவர் கடைசி 2 ஓவர்களில் பவுண்டரி மழை பொழிந்தார். 69 பந்துகளில் 121 ரன்களை குவித்தார் ரோஹித். 8 சிக்ஸ், 11 ஃபோர் அடித்து இருந்தார் ரோஹித். இது அவரது ஐந்தாவது சர்வதேச டி20 போட்டி சதம் ஆகும்.
இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் நான்கு சதம் அடித்து இருந்த கிளென் மேக்ஸ்வெல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை முந்திய ரோஹித் சர்மா தற்போது அதிக சர்வதேச டி20 போட்டி சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும், ஐபிஎல் உள்ளிட்ட ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் இது அவரது ஆறாவது சதம் ஆகும்.
கடந்த 2019 ஜனவரி மாதம் முதல் ரோஹித் சர்மா ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. அந்த குறையை போக்கி இருக்கிறார் ரோஹித். மேலும், 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் தன் டி20 ஃபார்மையும் நிரூபித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications