மும்பை : டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. பார்படாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஆடுகளம் காய்ந்த நிலையில் இருக்கின்றது.
போட்டியின் முதல் பகுதியில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவும் ஓவர்கள் செல்ல செல்ல ஆடுகளம் தோய்வாக மாறும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் முதலில் பேட்டிங் செய்வது சாதகமாக கருதப்படுகிறது.

இந்த சூழலில் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அமெரிக்கா ஆடுகளத்தை விட இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆடுகளத்தில் புற்கள் இல்லை என்பதால் முதலில் பேட்டிங் செய்து ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் ஆடுகளம் மோசமாக இருந்தாலும் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று குறிப்பிட்ட ரோகித் சர்மா பார்படாசில் கடந்த இரண்டு நாட்களாக பயிற்சி செய்து களம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்து கொண்டதாக கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இருப்பதாக குறிப்பிட்ட ரோகித் சர்மா இங்கு விளையாடுவதை நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம் என்றும் கூறினார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ரோஹித் சர்மா, முகமது சிராஜ்க்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதனால், இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி தான் களமிறங்குவார்கள் என தெரிகிறது.
இதனை தொடர்ந்து பேசிய ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் இருந்தோம் என்று கூறினார். எனினும் இந்த போட்டிக்காக நல்ல முறையில் தயாராகி வந்திருக்கிறோம் என்று குறிப்பிட்ட ரஷித் கான் தங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார். இதேபோன்று ஆப்கானிஸ்தான் அணியில் கரீம் ஜனத்துக்கு பதிலாக அஸருதுல்லா ஷசாய் களமிறங்குகிறது.