மொஹாலி : முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் தன் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிதானமாகவே ஆடியது. 3 விக்கெட்களை இழந்து 14 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அந்த அணி 130, 140 ரன்கள் தான் எடுக்கும் என நினைத்த நிலையில், 15 மற்றும் 16வது ஓவர்களில் மட்டும் 31 ரன்கள் சேர்த்தது.
அதன் பின் முகேஷ் குமார் வீசிய 18வது ஓவரில் அதிரடி ஆட்டம் ஆடி வந்த முகமது நபி மற்றும் ஹஸ்மத்துல்லா என இருவருமே அவுட் ஆனார்கள். எனினும், 19 மற்றும் 20வது ஓவரில் மொத்தமாக 28 ரன்கள் சேர்த்து 158 ரன்களை சேர்த்தது ஆப்கானிஸ்தான் அணி. இந்திய அணியில் ரவி பிஷ்னோய் அதிகபட்சமாக 3 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். முகேஷ் குமார், அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்களும், சிவம் துபே 1 விக்கெட்டும் எடுத்தனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரும் விக்கெட் வீழ்த்தவில்லை. அக்சர் பட்டேல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் சாய்த்தார்.
இந்திய அணிக்கு எதிராக டி20 போட்டியில் 158 ரன்கள் எடுத்ததே ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முன்னதாக 2021 டி20 உலகக்கோப்பையில் 144 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை முறியடித்து சாதனை செய்தது ஆப்கானிஸ்தான். ஆனாலும், இந்தப் போட்டியில் இந்தியா 17.3 ஓவர்களில் இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.