இவர் 20 ரன்கள் எடுத்து இந்தியா தோற்றதே இல்லை.. ரோஹித்தை மிஞ்சிய இளம் துவக்க வீரர்
மும்பை : இந்திய அணியின் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 போட்டிகளில் இதுவரை சிறந்த துவக்க வீரர்களாக சொல்லப்படும் சுப்மன் கில், ரோஹித் சர்மாவை மிஞ்சி இருக்கிறார். அதே போல பவர்பிளே ஓவர்களில் ரோஹித், கோலி மற்றும் சுப்மன் கில் செய்ய முடியாத விஷயத்தை செய்து இருக்கிறார்.
டி20 போட்டிகளில் முதல் ஆறு ஓவர்கள் பவர்பிளே ஓவர்கள். அப்போது 30 கஜம் வட்டத்துக்கு வெளியே இரண்டு பீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும். அதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் எளிதாக பவுண்டரி அடிக்கலாம். அதே சமயம், முதல் சில ஓவர்களில் பந்து புதியதாக இருக்கும் என்பதால் நன்றாக ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகும் என்பதால் அவுட் ஆகவும் வாய்ப்பு அதிகம்.

டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் விரைவாக ரன் எடுக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அதே சமயம் விக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆடும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிக்க மறுப்பார்கள். ஆனால், இந்திய அணியின் இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் எப்போதும் விக்கெட் பறிபோவதை பற்றி கவலைப்படாமல் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். அப்படி ஆடுவதால் அவர் பல முறை குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பதாக புகார் இருந்தாலும் அவரால் இந்தியா வெற்றி பெற்று வருவது பற்றி ஒரு புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.
ஜெய்ஸ்வால் இதுவரை 14 இன்னிங்க்ஸ்களில் இந்திய டி20 அணியில் துவக்கம் அளித்து இருக்கிறார். அதில் எட்டு முறை 20 ரன்களை கடந்து ரன் குவித்து இருக்கிறார். அந்த எட்டு போட்டிகளிலும் இந்திய அணி முதல் ஆறு ஓவர்கள் பவர்பிளேவில் 50 ரன்களை கடந்து ரன் சேர்த்து இருக்கிறது. அந்த எட்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஜெய்ஸ்வால் ஆடிய 14 இன்னிங்க்ஸ்களில் 292 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ஆனால், அவரது பவர்பிளே ஓவர்கள் ஸ்ட்ரைக் ரேட் 158.69 ஆகும். அதே சமயம், மற்ற இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களின் பவர் பிளே ஓவர் ஸ்ட்ரைக் ரேட் குறைவாகவே உள்ளது. பவர் பிளே ஓவர்களில் ரோஹித் சர்மா ஸ்ட்ரைக் ரேட் 134 ஆகவும், சுப்மன் கில் ஸ்ட்ரைக் ரேட் 114 ஆகவும், விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் 117 ஆகவும் உள்ளது.
இந்த காரணத்தால் ஜெய்ஸ்வால் இந்திய டி20 அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார். அவரை நிச்சயம் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அணியின் துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும் என்ற குரல்களும் எழத் துவங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications