மும்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஓராண்டுக்கு பின் டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.
ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். விராட் கோலியும் அணியில் இடம் பெற்று இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

காயத்தில் சிக்கி இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. சஞ்சு சாம்சன் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஜிதேஷ் சர்மா அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருக்கிறார். நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் என அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கின்றனர்
ஓராண்டுக்கு பின் அணிக்கு திரும்பி இருக்கும் ரோஹித் சர்மா துவக்க வீரராக, ஜெய்ஸ்வால் உடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. விராட் கோலி மூன்றாம் வரிசையிலும், சுப்மன் கில் அல்லது திலக் வர்மா நான்காம் வரிசையிலும் பேட்டிங் இறங்கலாம். அடுத்த இடத்தில் ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா பேட்டிங் செய்வார்கள். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், அக்சர் பட்டேல், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் பிட்ச்சை பொறுத்து கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் அல்லது வேகப் பந்துவீச்சாளர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
சுப்மன் கில், சஞ்சு சாம்சன், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அதே போல, ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அணியில் தங்கள் இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள முடியும்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார்