மும்பை : இந்திய டி20 அணியில் சுப்மன் கில் இடத்துக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் டி20 அணியில் துவக்க வீரராக இடம் பெற்று வருகிறார். அவருடன் இடது கை பேட்ஸ்மேனான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்கம் அளித்து வந்தார். தற்போது ரோஹித் சர்மா டி20 அணிக்கு நீண்ட காலம் கழித்து திரும்பி உள்ள நிலையில் வலது - இடது கை பேட்ஸ்மேன்கள் துவக்கம் அளிக்க வேண்டும் என்பதால் சுப்மன் கில்லுக்கு பதிலாக ரோஹித் சர்மா அணியில் துவக்கம் அளிப்பார் என கூறப்படுகிறது.

துவக்க வீரராக ஆட முடியாத நிலையில், சுப்மன் கில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு இருந்தது. ஆனால், விராட் கோலியும் டி20 அணிக்கு திரும்பி இருப்பதால் அந்த வாய்ப்பும் கில்லுக்கு இனி கிடைக்காது. ஒருவேளை ஜெய்ஸ்வால் சரியாக ரன் குவிக்கவில்லை என்றாலோ, ரோஹித், ஜெய்ஸ்வால் இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலோ மட்டுமே சுப்மன் கில்லுக்கு டி20 போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி நிச்சயம் ஆடுவார் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் 2 - 0 என தொடரை கைப்பற்றும் பட்சத்தில் கோலி மூன்றாவது போட்டியில் ஓய்வு எடுக்கக் கூடும். அப்போது சுப்மன் கில் மூன்றாம் வரிசையில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
திலக் வர்மாவும் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்யக் கூடிய வீரர் என்பதால் அந்தப் போட்டியையும் சுப்மன் கில் சமாளிக்க வேண்டி இருக்கும். ஆக மொத்தத்தில் ஆப்கானிஸ்தான் தொடரிலேயே சுப்மன் கில் "வாட்டர் பாய்" வேலை செய்யப் போகிறார் என்பது தான் சோகமான விஷயம்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார்