IND vs AFG டெஸ்ட் அணி அறிவிப்பு.. பண்ட்டுக்கு ஆப்பு.. ராகுலுக்கு ஜாக்பாட்.. பும்ராவுக்கு ஓய்வு
டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் அதிரடி மாற்றமாக ரிஷப் பண்ட்டிடம் இருந்த துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, கே.எல். ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ள இந்த அணியில், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் 6 முதல் 10 வரை பஞ்சாப்பின் முல்லன்பூரில் உள்ள மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கில் வராது என்பதால், தேர்வுக் குழுவினர் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

துணை கேப்டன் மாற்றம்
கடந்த சில தொடர்களாக டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், தற்போது அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அனுபவ வீரர் கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பண்ட் அணியில் விக்கெட் கீப்பராக நீடித்தாலும், தலைமைப் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு
தொடர்ச்சியாக விளையாடி வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சைத் தலைமை தாங்குவார். ஐபிஎல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மானவ் சுதர், குர்னூர் ப்ரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகிய இளம் வீரர்களுக்கு முதன்முறையாக டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
6 மாதங்களுக்குப் பின் டெஸ்ட்
கடந்த 2025 நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தனது மண்ணில் விளையாடிய இந்திய அணி 0-2 எனத் தொடரை இழந்தது. அதன் பிறகு 6 மாதங்கள் கழித்து இந்திய அணி தற்போதுதான் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் டெஸ்ட் அரங்கில் மோதுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2018-ல் நடந்த போட்டியில் இந்தியா 2 நாட்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் அணி விவரம்: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர், குர்னூர் ப்ரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜூரல்.


Click it and Unblock the Notifications
