கோலிக்கு செக் வைத்த பிசிசிஐ.. இதை செய்தால் தான் டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும்
மும்பை : விராட் கோலி ஓராண்டுக்கு பின் இந்திய டி20 அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் அவருக்கு இன்னும் டி20 அணியில் நிரந்தர இடம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி என இருவருமே இடம் பெற்றுள்ளனர். ஓராண்டு இடைவெளிக்கு பின் இருவரும் டி20 அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.

இதில் விராட் கோலியை டி20 அணியில் இருந்து பிசிசிஐ ஒதுக்கி வைக்க என்ன காரணம் என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. விராட் கோலி கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்து இருந்தார். ஆனால், அவர் சுழற் பந்துவீச்சில் அதிரடி பேட்டிங் செய்ய முடியாமல் தடுமாறுகிறார்.
2020ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் 7வது ஓவர் முதல் 16வது ஓவர் வரை கோலி பேட்டிங் செய்யும் போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 116ஆக உள்ளது. இந்த இடைப்பட்ட ஓவர்களில் அவர் 10.6 பந்துகளுக்கு ஒரு முறை மட்டுமே பவுண்டரி அடித்து இருக்கிறார். அதிலும் ஸ்பின்னர்கள் பந்துவீச்சில் 15 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து இருக்கிறார். மேலும், ஸ்பின்னர்கள் ஓவர்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 105 மட்டுமே.
இந்த பலவீனத்தால் தான் விராட் கோலி கடந்த ஓராண்டாக டி20 அணியில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. தற்போது அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கோலியிடம் அவரது பலவீனம் குறித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் பின்னரே அவர் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இடம் பெற்று இருக்கிறார். இதன் மூலம் அவர் சுழற் பந்துவீச்சில் வலுவான ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என பிசிசிஐ நினைப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஆப்கானிஸ்தான் தொடரில் விராட் கோலி பேட்டிங்கில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்கவில்லை என்றால் அதை வைத்தே அவரை டி20 அணியில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications