விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மொத்தமாக 6 பேர் இடதுகை பேட்ஸ்மேன்களாக இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலங்களில் இந்திய அணிக்காக விளையாடிய இடதுகை பேட்ஸ்மேன்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஷிகர் தவானுக்கு பின் டாப் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்று ரசிகர்கள் பல ஆண்டுகளாக புலம்பியும் மீண்டும் மீண்டும் பிசிசிஐ இடதுகை பேட்ஸ்மேன்களை தேர்வு செய்யாமல் இருந்து வந்தது. இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் ஆடிய ஒரு டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.

இதையடுத்து இடதுகை பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருக்க வேண்டுமென்று ரிஷப் பண்டை டெஸ்ட் அணிக்குள் கொண்டு வந்தது. இதன்பின் இந்திய அணி நிரந்தர வீரர்களில் ஒருவராக மாறினார். இவரைத் தவிர்த்து ஆல்ரவுண்டரான ஜடேஜா மட்டுமே இந்திய அணி பேட்டிங் வரிசையில் இடதுகை பேட்ஸ்மேனாக இருந்து வந்தார். இருப்பினும் டாப் 4 இடங்களில் வலிமையான இடதுகை பேட்ஸ்மேனை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஏங்கினர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் மொத்தமாக 6 பேர் இடதுகை பேட்ஸ்மேன்களாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் டாப் 4 இடங்களில் 3 பேர் இடதுகை பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர். தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இடதுகை பேட்ஸ்மேன்கள்.
இதுமட்டுமல்லாமல் 6வது வரிசையில் களமிறங்கும் ரிங்கு சிங், 7வது வீரராக களமிறங்கும் அக்சர் படேலும் இடதுகை பேட்ஸ்மேன்கள் தான். அதேபோல் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கும் இடதுகை பேட்ஸ்மேன் தான். இவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக ஆட கூடிய பேட்ஸ்மேன் தான். ஒரே போட்டியில் 6 இந்திய வீரர்கள் இடதுகை பேட்ஸ்மேன்களாக இருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.