ஒன் மேன் ஷோ.. 47 பந்தில் சதமடித்து ஆஸ்திரேலிய வீரர் சாதனை.. ரன் வள்ளலாக மாறிய பிரசித், பிஷ்னாய்!
விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 209 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் - மேத்யூ ஷார்ட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசினார். இதில் முதல் ஓவரில் நிதானம் காத்த ஆஸ்திரேலியா அணி, 2வது ஓவரில் அதிரடிக்கு மாறியது.

பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள் விளாசப்பட்டது. இதனிடையே 4வது ஓவரிலேயே ஸ்பின்னரை அட்டாக்கில் கொண்டு வந்தார் சூர்யகுமார் யாதவ். அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசப்பட்ட நிலையில், ரவி பிஷ்னாய் வீசிய 5வது ஓவரில் ஷார்ட் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் ஸ்டீவ் ஸ்மித் - இங்லிஸ் கூட்டணி இணைந்து இந்திய அணி பவுலர்களை விளாசி தள்ளியது. பிரசித் கிருஷ்ணா வீசிய 8வது ஓவரில் மட்டும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் என்று 19 ரன்களை சேர்த்தது.
அதன்பின் ஒவ்வொரு ஓவருக்கு பவுண்டரிகள் அடிக்கப்பட ஆஸ்திரேலியா அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் குவித்தது. இதன்பின் இங்லிஸ் உச்சக்கட்ட அதிரடியில் ஆடினார். சிறப்பாக ஆடிய அவர் 29 பந்துகளில் அரைசதம் அடிக்க, அதன்பின் அவர் அடித்த ஷாட்கள் அனைத்தும் பவுண்டரிக்கு பறந்துகொண்டே இருந்தது. அதிலும் ரவி பிஷ்னாயை மட்டும் குறித்து அடித்த அவர், 12வது ஓவரில் 18 ரன்களும், 15வது ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 21 ரன்களையும் விளாசினார்.
இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 15 ஓவர்களில் 151 ரன்களை குவித்தது. இதனிடையே மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 39 பந்துகளில் அரைசதம் அடிக்க, பின்னர் 52 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் இங்லிஸ் உடன் ஸ்டாய்னிஸ் கூட்டணி அமைத்தார். இந்த நிலையில் தரமான ஆட்டத்தை ஆடிய இங்லிஸ் 47 பந்துகளில் முதல் டி20 சதத்தை விளாசி அசத்தினார். டி20-யில் ஆஸ்திரேலிய வீரரால் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இதுவாகும். சிறப்பாக ஆடிய அவர் கடைசி நேரத்தில் 50 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பின் ஃபினிஷரான டிம் டேவிட் - ஸ்டாய்னிஸ் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் 16 ரன்களை விளாச, ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரை வீச முகேஷ் குமார் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னாய் இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications