பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஹர்ஷித் ராணா தனது முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேனை சீண்டினார். அதற்கு மார்னஸ் முத்தம் கொடுப்பது போல செய்து அவரை அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே விவாதத்தை பரபரப்பை கிளப்பியது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி கேப்டன் பும்ரா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்து பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறியது. அந்த அணியும் ரன் குவிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்து. கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் முதல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதன்பின் அறிமுக வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா எட்டாவது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அதுவே அவரது முதல் ஓவர் ஆகும். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் ஓவரை வீசிய அவர் ஐந்தாவது பந்தின் போது பந்தை வீசிய அதே வேகத்தில் மார்னஸ் லாபுஷேன் அருகே சென்று அவரிடம் ஏதோ பேசினார்.
அவரை சீண்டுவதற்கு முயற்சி செய்தார். அதற்கு பதில் அளிக்காத மார்னஸ் புன்னகையுடன், முத்தம் கொடுப்பது போல சைகை செய்து ஹர்ஷித்தை அனுப்பி வைத்தார். இவர்களுக்கு இடையே ஆன இந்த சீண்டல் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் ஹர்ஷித் ராணா டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தினார்.
மறுபுறம் மார்னஸ் லாபுஷேன் ரன் குவிக்க முடியாமல் நீண்ட நேரம் திணறினார். அவர் 52 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் எடுத்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலிய அணி 47 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது.