பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்து இருக்கிறது. இந்த போட்டி நடைபெற்று வரும் பெர்த் மைதானத்தின் பிட்ச் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிட்டது. இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் எத்தனை ஸ்கோர் எடுத்தால் வெற்றி பெறலாம்? என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நவம்பர் 22 அன்று துவங்கியது. முதல் நாள் ஆட்டத்தின் போது பிட்ச் முற்றிலுமாக வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அப்போது பிட்ச்சில் அதிக புற்கள் இருந்ததால் அதுபோன்ற சூழ்நிலை இருந்தது.

முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் 17 விக்கெட் வீழ்த்தப்பட்டன. இந்திய அணி 150 ரன்களுக்கு அவுட் ஆகி இருந்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.
இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய திணறியதால் இந்த போட்டி இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்து விடும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்கள் அல்லது 200 ரன்கள் எடுத்தாலே ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து விடலாம் என்ற கணிப்புகளும் இருந்தது.
ஆனால், இரண்டாவது நாளில் பிட்ச்சின் தன்மை வெகுவாக மாறி இருந்தது. முதல் நாள் இருந்தது போல இரண்டாவது நாள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவவில்லை. முதல் 30 ஓவர்களுக்கு பின் பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலை இருந்தது. இதை பயன்படுத்தி இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தற்போது 218 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணியால் இத்தனை எளிதாக ரன் குவிக்க முடிகிறது என்றால் நிச்சயமாக ஆஸ்திரேலிய அணியாலும் அதை செய்ய முடியும். எனவே, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை எடுத்தால் மட்டுமே ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயித்து அழுத்தம் கொடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற முடியும்.
இன்னும் ஒரு விக்கெட் கூட விழாத நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தது 400 ரன்கள் எடுக்க வேண்டும். முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில், இந்திய அணி 400 ரன்கள் எடுத்தால் 447 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும்.
ஆஸ்திரேலிய அணி தங்களின் சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதில் வித்தகர்கள் என்பதால் இந்திய அணி நிச்சயம் 400 ரன்களுக்கும் அதிகமான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். மூன்றாம் நாள் முழுவதும் இந்திய அணி பேட்டிங் செய்ய வேண்டும். அதன் மூலம் இந்திய அணி நிச்சயம் 400 ரன்களை எட்ட வாய்ப்பு உள்ளது.