IND vs AUS: 47 ஆண்டு வரலாற்றை உடைத்த பும்ரா படை.. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் மாபெரும் வெற்றி
பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களும் எடுத்தன. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் விஸ்வரூபம் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள் 487 ரன்கள் குவித்தனர். ஜெய்ஸ்வால் 161 ரன்களும், கே எல் ராகுல் 77 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் எடுத்தனர்.

இதை அடுத்து இந்திய அணி 533 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் என்று இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா மண்ணில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
1977 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அதுவே இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. அதன் பின் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி இரண்டு முறை டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருந்த போதும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.
47 ஆண்டுகளுக்கு முன் பிஷன் சிங் பேடி தலைமையிலான இந்திய அணி பெற்ற 222 ரன்கள் வெற்றியை இந்திய அணியால் முறியடிக்க முடியாமல் இருந்தது. தற்போதும் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்து இருக்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும் நிலையில், இந்த தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications