பெர்த்: இந்திய அணியின் தற்காலிக கேப்டனான பும்ராவின் பந்துவீச்சு விதிகளுக்கு புறம்பாக இருப்பதாகவும், அவரை எப்படி பந்து வீச அனுமதித்து இருக்கிறார்கள்? எனவும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். அவர் 5 விக்கெட் வீழ்த்திய நிலையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்த குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த இரண்டு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விடுப்பில் இருக்கும் நிலையில், தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றார் பும்ரா.

அவர் வேகப்பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து மோசமான நிலையில் இருந்தது. பும்ரா மட்டுமே 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தில் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தி தனது 11வது "5 விக்கெட் ஹால்" சாதனையை செய்தார்.
அவரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறியதை பார்த்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பும்ரா பந்து வீசுவது சர்வதேச கிரிக்கேட் கவுன்சில் விதிகளுக்கு புறமானது என கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர். அவர் தனித்துவமான பந்துவீசும் முறையை கடைபிடிக்கும் நிலையில், அவரது முழங்கை மடிந்து இருப்பதாகவும், அவர் பந்தை எறிவதாகவும் அவர்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
இந்த சர்ச்சை முதல் முறையாக கிளம்பவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு பிக் பாஷ் லீக் தொடரில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்துவீச்சு விதிகளுக்கு புறம்பாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்போது பும்ரா வீசுவது மட்டும் சரியா? என சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அப்போது முன்னாள் இங்கிலாந்து வீரரும், பவுலிங் பயிற்சியாளருமான இயான் பான்ட் அது பற்றி விளக்கி இருந்தார். பும்ராவின் பந்துவீச்சு எப்படி விதிகளுக்கு உட்பட்டது என்பதை விளக்கி இருந்தார். அப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளில் இருக்கும் ஹைப்பர் மொபைலிட்டி (Hypermobility) என்ற விதிமுறையின்படி பும்ராவின் பந்துவீச்சு விதிகளுக்கு உட்பட்டது தான் என அவர் விளக்கம் அளித்து இருந்தார்.
எனவே, பும்ராவின் பந்து வீச்சு தனித்துவமாக இருப்பதால் அது சில ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பந்தை எறிவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அவர் அதிக விக்கெட் வீழ்த்தியதாலேயே ஆஸ்திரேலிய ரசிகர்கள் இப்படி சர்ச்சையை கிளப்பி வருவதாக இந்திய ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.