IND vs AUS: ராகுல் செய்த செயல்.. தோனிக்கு பிறகு இவர்தான்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்.. என்ன நடந்தது?
பெர்த்: இந்திய அணியின் அனுபவ வீரர் கே எல் ராகுல் பெர்த் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் செய்த செயல் ரசிகர்களை நெகழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்தப் போட்டியில் அறிமுகமான இளம் வீரர்களுக்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை அவர் அளித்தார். இந்தப் போட்டியின் வெற்றிக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாமல், சக வீரர்களுக்கு உதவியதன் மூலமும் முக்கிய காரணமாக விளங்கினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 104 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அதிரடியாக ரன் சேர்த்தது. ஜெய்ஸ்வால் 161 ரன்களும், கே எல் ராகுல் 77 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி சதம் அடித்தார்.

இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி என இரண்டு வீரர்கள் டெஸ்ட்டில் அறிமுகம் ஆனார்கள்.
அவர்கள் இருவரது செயல்பாடும் திருப்திகரமாகவே இருந்தது. போட்டி முடிந்தவுடன் கே எல் ராகுல் மைதானத்தில் இருந்த ஸ்டம்புகளை எடுத்துச் சென்று ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வழங்கினார். அவர்களுக்கு இது மறக்க முடியாத ஞாபகச் சின்னமாக அமைந்தது.
பொதுவாக போட்டி முடிந்த உடன் ஸ்டம்புகளை அந்த போட்டியில் சிறப்பாக ஆடிய வீரர்கள் எடுத்துச் செல்வது வழக்கம். முன்பு தோனி ஸ்டம்ப்புகளை இளம் வீரர்களுக்கு அளிப்பார். அந்த வழக்கம் தோனியுடன் நின்று விட்டது. தற்போது கே எல் ராகுல் அதை மீண்டும் செய்து இருக்கிறார். இந்த சம்பவம் ரசிகர்களை நெகழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்ய தடுமாறிய நிலையில், இரண்டாவது இன்னிங்க்ஸில் அவருக்கு ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் எப்படி ஆடுவது? என கே எல் ராகுல் தொடர்ந்து ஆலோசனை அளித்து அவரை நிதானப்படுத்தினார். ஜெய்ஸ்வால் நிதானமாக ஆடி சதம் அடித்தார். அந்த வகையில் கே எல் ராகுல் அரைசதம் அடித்ததோடு, பின்னணியில் இருந்தும் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.


Click it and Unblock the Notifications