IND vs AUS: மாபெரும் வரலாறு படைத்த விராட் கோலி.. டான் பிராட்மேன் சாதனையை முறியடித்து அசத்தல்
பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். இது அவரது 80 வது சர்வதேச சதம் ஆகும். மேலும், டெஸ்ட் போட்டிகளில் இது கோலியின் 30 வது சதம் ஆகும். இதன் மூலம், அவர் ஆஸ்திரேலிய மண்ணில் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார்.
டான் பிராட்மேன் 29 டெஸ்ட் சதங்கள் அடித்து இருக்கும் நிலையில் அந்த ஜாம்பவானை முந்தி இருக்கிறார் விராட் கோலி. இந்தப் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி 29 டெஸ்ட் சதங்கள் அடித்து இருந்தார். சுமார் ஓராண்டு கழித்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்த சாதனையை படைத்து இருக்கிறார்.

இதன் மூலம் இந்திய அளவில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 49 டெஸ்ட் சதங்கள் அடித்து உலக அளவிலும், இந்திய அளவிலும் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரராக இருக்கிறார்.
ராகுல் டிராவிட் 36 சதங்களும், சுனில் கவாஸ்கர் 34 சதங்களும் அடித்து இந்திய அளவில் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் 30 சதங்களுடன் விராட் கோலி நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்த சதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அடித்த ஒன்பதாவது சதம் ஆகும்.
மேலும், ஆஸ்திரேலியா மண்ணில் இது விராட் கோலியின் 7 வது டெஸ்ட் சதம் ஆகும். ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி 10 சதங்கள் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த பேட்ஸ்மேனும் இந்த சாதனையை செய்ததில்லை. விராட் கோலி நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில் இந்த சதம் மூலம் அவர் அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
விராட் கோலி சதம் அடித்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்கள் எடுத்த 6 விக்கெட்கள் இழந்த நிலையில் டிக்ளர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த இந்திய அணி மொத்தமாக 533 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் என்று இமாலய இலக்கை நிர்ணயித்தது.


Click it and Unblock the Notifications