திருவனந்தபுரம்: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் - ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. கடந்த போட்டியை போலவே ஸ்டாய்னிஸ் முதல் ஓவரை வீசினார். முதல் 2 ஓவர்கள் நிதானம் காத்த இருவரும், 3வது ஓவரில் அதிரடிக்கு திரும்பினர்.

மேக்ஸ்வெல் வீசிய 3வது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளையும், கெய்க்வாட் ஒரு பவுண்டரியையும் விளாசி அந்த ஓவரில் மட்டும் 15 ரன்களை சேர்த்தனர். தொடர்ந்து அப்பட் வீசிய 4வது ஓவரில் ஜெய்ஸ்வால் ருத்ரதாண்டவம் ஆடினார். ஹாட்ரிக் பவுண்டரியை விளாசிய ஜெய்ஸ்வால், அடுத்த 2 பந்துகளில் சிக்சரை விளாசினார். இதன் மூலம் 4 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், 24 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
இதன்பின் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாட, இஷான் கிஷன் பொளந்து கட்டினார். இதனால் 10 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 101 ரன்களை எட்டியது. தொடர்ந்து மேக்ஸ்வெல் வீசிய 14வது ஓவரில் மட்டும் இருவரும் இணைந்து 23 ரன்களை விளாசி தள்ளினர். இதன்பின் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய தொடங்கிய இஷான் கிஷன், சிக்சர்களாக பறக்கப்பட்டார். 29 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன், 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க, 17.4வது ஓவரின் 4வது பந்தில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே சிறப்பாக ஆடிய ருதுராஜ் 39 பந்துகளில் அரைசதம் கடக்க, கடைசி நேரத்தில் ரிங்கு சிங் களமிறங்கினார். இந்த நிலையில் ஷேன் அப்பட் வீசிய 19வது ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்ஸ் உட்பட மொத்தமாக 25 ரன்களை விளாசினார் ரிங்கு சிங்.
தொடர்ந்து எல்லிஸ் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்திலேயே ருதுராஜ் சிக்ஸ் அடிக்க, 2வது பந்தில் 58 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த திலக் வர்மா சிக்ஸ் அடிக்க கடைசி ஓவரில் 20 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் வெறும் 9 பந்துகளில் 31 ரன்களை விளாசி தள்ளினார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2 - 0 என முன்னிலையில் உள்ளது.