திருவனந்தபுரம்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட தயாராக இருப்பதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக 12 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளதால், அடுத்த சில தொடர்களிலேயே இந்திய அணியை கட்டமைக்க வேண்டிய நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ரிங்கு சிங் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு சிங் அபாரமாக சிக்ஸ் அடித்து அசத்தினார். அதனை விடவும் இந்திய அணியின் புதிய ஃபினிஷராக ரிங்கு சிங் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கடைசி நேரத்தில் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் தோனியை போல் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளதால், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நம்பர் 6 வீரர் ரிங்கு சிங் தான் என்று பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ரிங்கு சிங் டி20 கிரிக்கெட் மட்டுமல்லாமல் அடுத்தடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்படுவார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரிங்கு சிங் பேசுகையில், டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட நான் ரெடியாக உள்ளேன். அடுத்து வரவுள்ள போட்டிகளை பற்றி சிந்திக்க மாட்டேன். எந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்தாலும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ஆசை.
அது எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் கவலையில்லை. நிச்சயம் எனது 100 சதவிகித திறமையை வெளிப்படுத்த வேண்டும். டி20 உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடுவது எனக்கு மிகப்பெரிய விஷயமாகும். ஆலிகரில் இருந்து இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரிலும் விளையாடும் ஒரே வீரர் நான் தான். அதேபோல் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது எனது கனவுகளில் ஒன்று. ஒருவேளை டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டால், எப்படி நடந்து கொள்வேன் என்பதே தெரியாது. ஆப்னால் கனவை எட்டிபிடிக்க கடுமையாக உழைப்பேன் என்று கூறியுள்ளார்.