திருவனந்தபுரம்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், திருவனந்தபுரம் தண்ணீரில் மிதப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடக்கவுள்ளது. இதற்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளைச் சேர்ந்த வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதனால் 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி பதிலடி கொடுக்க தீவிரமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணி தரப்பில் டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், நாளை போட்டி நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இன்று காலை பெய்த கனமழையால் திருவனந்தபுரம் மைதானம் முழுக்க தண்ணீர் தேங்கியுள்ளது. இன்னும் சொல்ல போனால், திருவனந்தபுரம் மைதானமே தண்ணீரில் மிதக்கிறது என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் மைதானத்தை முழுமையாக தார்பாய் போட்டு மூடப்படாததால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மைதானத்தில் இருக்கும் தண்ணீர் வடிந்தால் மட்டுமே ஆட்டம் நடத்த முடியும்.

இந்த நிலையில் வானிலையை பொறுத்தவரை, நாளை காலை முதலே திருவனந்தபுரம் மைதானத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதிய நேரங்களிலும் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டம் நடக்கும் மாலை நேரத்தில் மழை பெய்யாது என்றும், ஆனால் ஆட்டம் திட்டமிட்டபடி தொடங்கப்படுமா என்று கேள்விக்குறி என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆட்டத்தை பொறுத்தவரை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. கடந்த போட்டிகளில் சொதப்பிய ருதுராஜ் கெய்க்வாட், அக்சர் படேல் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.