அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து தனது ஃபார்மை மீட்டு இருக்கிறார். இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆலன் பார்டர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-ஐ விமர்சனம் செய்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி மோசமாக தோல்வி அடைந்து இருந்தது.

அந்தத் தொடரில் விராட் கோலி 6 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். 2024 ஆம் ஆண்டு அவர் மிக மோசமான ஃபார்மில் இருந்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அவர் சரியாக விளையாட மாட்டாரோ? என்ற கவலை இந்திய ரசிகர்களுக்கு இருந்தது.
ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் தனது 30 வது டெஸ்ட் போட்டி சதத்தை அடித்தார். இதன் மூலம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். இது ஆஸ்திரேலிய அணிக்கு ஆபத்தான விஷயமாக உள்ளது. ஏனெனில், ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி மிகச் சிறப்பான டெஸ்ட் பேட்டிங் செயல்பாட்டை வைத்து இருக்கிறார்.
விராட் கோலி ஃபார்ம் அவுட் ஆகி ஆஸ்திரேலியா சென்றார். ஆனால், முதல் போட்டியிலேயே ஃபார்முக்கு திரும்பி இருப்பதன் மூலம் மீதம் உள்ள நான்கு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது பற்றி. ஆலன் பார்டர் ஆஸ்திரேலிய கேப்டனை விமர்சனம் செய்து இருக்கிறார்.
பார்டர் இது பற்றி பேசுகையில், "விராட் கோலி எந்த சிரமமும் இன்றி சதம் அடித்ததை பார்த்து நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அவர் இந்த தொடரில் மீதம் உள்ள போட்டிகளில் தன்னம்பிக்கையுடன் இருப்பதை ஆஸ்திரேலியா விரும்பாது. விராட் கோலியை அவரது ஆட்டத்தின் துவக்கத்தில் கட்டுப்படுத்தாமல் தவறு செய்தது. சில ஃபீல்டிங் உத்திகளை ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சரியாக செயல்படுத்தவில்லை." என்றார்.
மேலும், "கோலி பேட்டிங்கில் மிகவும் அழுத்தத்தில் இருந்தார். ஆனாலும், அவரை ஆஸ்திரேலிய அணி சரியாக கட்டுப்படுத்தவில்லை. அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்த போது ஃபீல்டிங் அமைத்து இருந்தது சரியாக இல்லை. அதனால். அவர் துவக்கத்திலேயே ரன் குவிக்க துவங்கி விட்டார். என்றார் பார்டர். அதே போல, ஜெய்ஸ்வாலுக்கு எதிராகவும் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஷார்ட் பால் உத்தியை சரியாக செயல்படுத்தவில்லை எனவும் அவர் விமர்சனம் செய்து இருக்கிறார்.