விசாகப்பட்டினம்: இந்திய டி20 கிரிக்கெட்டில் வரலாற்றில் எந்த பந்தையும் சந்திக்காமலேயே ஆட்டமிழந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதல் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. சிறப்பாக பேட்டிங் செய்த இளம் வீரர் இங்லிஸ் 50 பந்துகளில் 110 ரன்களை குவித்தார்.

இதையடுத்து 209 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் முதல் ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தொடங்கிய ஜெய்ஸ்வால், 3வது பந்தில் சிக்சர் விளாசி அனைவரையும் வியக்க வைத்தார். அதன்பின் அந்த ஓவரின் 5வது பந்தில் ஜெய்ஸ்வால், ஃபைன் லெக் திசையில் அடித்தார். அந்த பந்து நேராக எல்லீஸ் கைகளுக்கு சென்றது.
அதனை பார்க்காமல் உடனடியாக 2வது ரன்னுக்கு ஜெய்ஸ்வால் அழைக்க, அவரை நம்பி ருதுராஜ் கெய்க்வாட் 2வது ரன்னுக்காக க்ரீஸில் இருந்து வெளியே வந்தார். அப்போது எல்லீஸ் பந்தை நேராக விக்கெட் கீப்பர் வேட்-டம் த்ரோ கொடுக்க, இரு வீரர்கள் நடு பிட்சில் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர். இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட் செய்யப்பட்டார். இதன் காரணமாக எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ருதுராஜ் கெய்க்வாட் டைமண்ட் டக்காகி வெளியேறினார்.
முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான சாதனையை படைத்துள்ளார். இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் டைமண்ட் டக் அவுட்டான 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 2016ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக போட்டியில் பும்ராவும், 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அமித் மிஸ்ராவும் டைமண்ட் டக்காகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.