இந்தூர் : உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு இந்திய அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தை வரும் புதன்கிழமை ஆஸ்திரேலியா உடன் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி விளையாடியது.
இதில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி சம்பிரதாய ஆட்டமாக தான் இருக்கும்.
இருப்பினும், உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒரு அணியாக இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் என்ற காரணத்தினால் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் ஆகியோரை பிசிசிஐ மூன்றாவது ஒருநாள் போட்டியில் சேர்த்தது. இதன் மூலம் உலககோப்பை தொடரில் விளையாட போகும் வீரர்கள் ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக கடைசியாக ஒரு முறை இணைந்து விளையாடினால் அணியில் என்ன குறை நிறை இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ள முடியும் என தேர்வு குழு இந்த முடிவு எடுத்தது.

இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த போட்டியை எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார். அதாவது மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் உள்ள இரண்டு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில்லுக்கு மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.
கில் வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா தொடர் என தொடர்ந்து விளையாடி வருவதால் உலகக் கோப்பைக்கு முன் அவருக்கு ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று ஆல் ரவுண்டர் சர்துல் தாக்கூருக்கும் கடைசி ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பந்து வீச்சிலும் பில்டிங்கிலும் பேட்டிங்கிலும் சொதப்பினார். எனினும் அவர் தொடர்ந்து விளையாடுவதால் அவருக்கு மனதளவில் சோர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்பதால் அவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தொடரை வென்று விட்டதால் பும்ராவும் கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது.