கவுகாத்தி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 52 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி வீரர் முகேஷ் குமார் சொந்த காரணங்களால் விலகியதால், அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார்.

இதன்பின் இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே 14 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 2வது ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வல் 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த இளம் வீரர் இஷான் கிஷன் 5 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் காரணமாக இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சிக்சர், பவுண்டரி என்று வெளுத்து வாங்கினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது. சிறப்பாக ஆடிய அவர் 29 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடித்து 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்த நிலையில் திலக் வர்மா களமிறங்கிய சூழலில், ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் இறங்கினார். ஒவ்வொரு ஓவர்களிலும் பவுண்டரியை விளாசி தள்ள, வெறும் 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் ருதுராஜ் கெய்க்வாட். முதல் 21 பந்துகளில் 21 ரன்களை மட்டுமே எடுத்து சூழலுக்கு ஏற்ப களத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட், அதன்பின் அதிரடியில் பொளந்து கட்டினார். அரைசதம் அடித்ததை தொடர்ந்து ஹார்டி வீசிய 18வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்களை விளாசினார்.
இதன் மூலமாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 51 பந்துகளில் 96 ரன்களுடன் ருதுராஜ் கெய்க்வாட் கடைசி ஓவரை எதிர்கொண்டார். கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கடைசி வரை களத்தில் இருந்த ருதுராஜ், 57 பந்துகளில் 123 ரன்களை விளாசினார்.