கவுகாத்தி: இந்திய டி20 அணியின் துணை கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்-க்கு நவம்பர் 28ஆம் தேதி அதிர்ஷ்டகரமான நாளாக அமைந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்களை விளாசியுள்ளார்.

முதல் 21 பந்துகளில் வெறும் 21 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த ருதுராஜ் கெய்க்வாட், அடுத்த 36 பந்துகளில் 102 ரன்களை விளாசியுள்ளார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். மொத்தமாக 86 ரன்களை பவுண்டரிகள் மூலமாகவே மட்டுமே சேர்த்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய என்ற சாதனையையும் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். இதனால் இனி ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்காக அனைத்து வடிவங்களுக்கான கிரிக்கெட் போட்டிகளிலும் நிரந்தரமாக விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நவம்பர் 28ஆம் தேதி ருதுராஜ் கெய்க்வாட்-க்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டும் நவ.28ஆம் தேதி நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 43 ரன்களை விளாசி சாதனை படைத்தார்.
இது சர்வதேச அளவில் பேசுபொருளாகியது. தற்போது மீண்டும் நவ.28ஆம் தேதி ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி சாதனை படைத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சில வீரர்களுக்கு ஒருசில நாட்கள் இவ்வாறு அமையும். விராட் கோலிக்கு ஏப்ரல் 23ஆம் தேதி போட்டி நடைபெற்ற போது, மூன்று முறை வெவ்வேறு ஆண்டுகளில் டக் அவுட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.