4வது டெஸ்ட் போட்டியை முடிஞ்சா ஜெயிச்சுக்குங்க.. ஆஸ்திரேலியா சவால்.. 92 ஓவரில் 340 ரன்கள் இலக்கு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கடைசி இன்னிங்ஸில் 340 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய அணிக்கு இந்த இலக்கை எட்ட அதிகபட்சமாக 92 ஓவர்கள் உள்ளன.
ஆஸ்திரேலிய மண்ணில் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இந்த இலக்கை எட்டுமா? என்ற விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியும், மூன்றாவது போட்டியை டிராவும் செய்து உள்ளன.

இந்த நிலையில் மெல்போர்னில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிவடையுமா? அல்லது இந்தியா 340 ரன்கள் இலக்கை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது. நிதிஷ் குமார் ரெட்டி அடித்த சதத்தால் இந்திய அணி கடைசி நேரத்தில் ஓரளவு நல்ல ஸ்கோரை எடுத்து இருந்தது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 105 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதலில் விக்கெட்களை இழந்தாலும் பின்வரிசை வீரர்களின் உதவியுடன் 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதை அடுத்து இந்திய அணிக்கு 340 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசி நாள் ஆட்டத்தில் 92 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் இந்திய அணிக்கு இந்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணி விக்கெட்களை இழக்காமல் இருந்தால் மட்டுமே இந்த இலக்கை எட்டுவதற்கான முயற்சியில் இறங்க முடியும்.
ஒரு வேளை இந்த இலக்கை எட்டினால் இது மாபெரும் வரலாற்று நிகழ்வாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 334 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இந்த இலக்கை துரத்தி வெற்றி பெற முயற்சிக்குமா? அல்லது நிதானமாக ஆடி போட்டியை டிரா செய்யுமா? என்பதை பொறுத்தே இந்தப் போட்டியின் முடிவு அமையும்.


Click it and Unblock the Notifications