IND vs AUS: புஷ்பா டா.. ஆஸ்திரேலிய அணியை கதறவிட்ட நிதிஷ் குமார்.. ஃபாலோ ஆன் கொடுக்கும் திட்டம் காலி
மெல்போர்ன்: இந்திய அணியின் ஆல் - ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் அரை சதம் அடித்த பின் அவர் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செய்வது போல சைகை செய்து காட்டினார். அதன் பின் அபாரமாக ஆடி சதம் அடித்தார். சதம் அடித்த பின் ஒரு காலில் மண்டியிட்டு அதை கொண்டாடினார்.
அவரது ஆட்டத்தால் இந்திய அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கலாம் என்ற ஆஸ்திரேலிய அணியின் திட்டம் தவிடு பொடியானது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து இருந்தது. மூன்றாவது நாளின் துவக்கத்தில் ரிஷப் பண்ட் 28 ரன்கள் எடுத்த நிலையில் மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்து கூட்டணி அமைத்து நிதானமாக ரன் சேர்த்தனர். நிதிஷ் குமார் ரெட்டி சுழற் பந்து வீச்சையும், வேகப்பந்து வீச்சையும் சமாளித்து ரன் சேர்த்தார். அவர் தனது முதல் அரை சதத்தையும் நிறைவு செய்தார்.
அரை சதம் அடித்த பின் அவர் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செய்வது பல தனது பேட்டை வைத்து செய்து காட்டினார். அதைக் கண்டு இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் எழுந்தது. ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கலாம் என திட்டமிட்டு இருந்தது. அந்த திட்டம் நிதிஷ் குமார் அரை சதத்தால் தவிடுபொடி ஆனது.
இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்தை தவிர்த்த பின் நிதிஷ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நிதானமாக ரன் சேர்த்தனர். சுந்தர் அரை சதம் அடித்து சரியாக 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் 9 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் தனது முதல் சதத்தை போராடி நிறைவு செய்தார் நிதிஷ் குமார் ரெட்டி. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்து இருந்தது. நிதிஷ் குமார் 105 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications