மெல்போர்ன்: மெல்போர்னில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த போட்டியில் மோசமாக ஆடியதால் தோல்வி அடைந்தது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-இன் பேட்டிங் மற்றும் பவுலிங் செயல்பாடுகள் அபாரமாக இருந்தது.
அதன் காரணமாகவே அந்த அணி இத்தனை பெரிய வெற்றியை பெற்றது. இதை அடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஸ்டீவ் ஸ்மித் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 140 ரன்கள் அடித்திருந்த போதும் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை.

அதற்கு பதிலாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 90 ரன்கள் எடுத்து, மொத்தம் 6 விக்கெட்கள் வீழ்த்திய கேப்டன் பாட் கம்மின்ஸ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவர் கேப்டனாகவும் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது. அப்போது கம்மின்ஸ் 49 ரன்கள் எடுத்து இருந்தார். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களும், மார்னஸ் லாபுஷேன் 72 ரன்களும், உஸ்மான் கவாஜா 57 ரன்களும், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்களும் எடுத்து இருந்தனர்.
எட்டாம் வரிசையில் இறங்கிய பாட் கம்மின்ஸ் 49 ரன்கள் சேர்த்தார். அதனால் ஆஸ்திரேலிய அணி எளிதாக 400 ரன்களை தாண்டி ரன் சேர்த்தது. அதேபோல முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் பாட் கம்மின்ஸ். பும்ராவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் மொத்தம் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் சரிவை சந்தித்தது. அப்போதும் எட்டாம் வரிசையில் இறங்கிய பாட் கம்மின்ஸ் 41 ரன்கள் சேர்த்தார். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தில் போட்டியை டிரா செய்ய முயற்சி செய்தபோது இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தினார் பாட் கம்மின்ஸ்.
ரோஹித் சர்மா, கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் என மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார் பாட் கம்மின்ஸ். அதற்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும், அவர் கேப்டன்சியிலும் அசத்தலாக செயல்பட்டார். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி டிரா செய்ய வேண்டி ஆடிய போது, ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து விக்கெட் இழக்காமல் நீண்ட நேரம் ஆடினர்.
அவர்களது விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என முடிவு செய்த பாட் கம்மின்ஸ், பகுதி நேர பந்துவீச்சாளர்களை களமிறக்கினார். அந்த முயற்சி வேலை செய்தது. ட்ராவிஸ் ஹெட் ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். இதை அடுத்து இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்து சரிவை சந்தித்து 155 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. பேட்டிங், பவுலிங் மற்றும் கேப்டன்சி என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட பாட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.