எல்.பி.டபள்யூ ஆன போதும் தப்பித்த கில்.. குழம்பி நின்ற ஆஸி, வீரர்கள்.. நோ பாலும் இல்லை.. எப்படி?
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டான போதும், நீண்ட நேர குழப்பத்திற்கு பின்னர் நாட் அவுட் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவென்று புரியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பி நின்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அந்த அணியில் தூண் போல நின்று ஆடிய உஸ்மான் கவாஜா 180 ரன்களை விளாசினார். அவருக்கு உறுதுணையாக நின்று ஆடிய கேமரூன் கிரீன் 114 ரன்களை குவித்தார். இமாலய ஸ்கோரை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கும் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 74 ரன்களை குவித்தனர்.

திடீர் குழப்பம்
இந்நிலையில் இந்த ஜோடியை பிரிப்பதற்காக நடந்த ஒரு எல்.பி.டபள்யூ குழப்பம் பேசுப்பொருளாகியுள்ளது. நாதன் லியோன் வீசிய பந்தை சுப்மன் கில் லெக் சைடில் அடிக்க நினைத்தார். அப்போது பந்து மிஸ்ஸாகி எல்.பி.டபள்யூ ஆனார். இதற்கு அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். எனினும் ஆஸ்திரேலிய அணி டி.ஆர்.எஸ் எடுத்தது. ரிவ்யூவில் பார்த்த போது பந்து நோ பாலாக இல்லை. நேராக பேடில் பட்டு, ஸ்டம்புகளிலும் முழுமையாக படும்படி தான் அமைந்தது. எனினும் அதற்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது.

டி.ஆர்.எஸ் முடிவு
நாதன் லியோன் அனைத்து விஷயங்களையும் சரியாக உணர்ந்து டிஆர்எஸ் கேட்க சொன்னார். ஆனால் மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்ததை போல, பந்து பேடில் பட்ட இடம் ஆஃப் சைட் ஸ்டம்பிற்கும் வெளியே ஆகும். அதாவது பேடில் பந்து படும் இடம் 3 ஸ்டம்ப் லைன்களில் ஏதாவது ஒன்றிலாக இருக்க வேண்டும். பிட்ச் ஆகும் இடம் ஆஃப் சைடில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பேட்ஸ்மேனை மோதும் இடம் ஸ்டம்ப் லைன்களில் இருக்க வேண்டும். இதனால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது.

மிஸ்ஸான வாய்ப்பு
நீண்ட நேரமாக அவுட் தான் என நினைத்து குழப்பத்திலேயே நின்றுக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அம்பயர்கள் விளக்கிய பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நடக்கும் நேரத்தில் சுப்மன் கில் 35 ரன்களை அடித்திருந்தார். ஆனால் அந்த ஒரு தவறினால் 70 ரன்களையும் கடந்த சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். பேட்டிங்கிற்கு சாதகமான களமாக இருப்பதால் நிச்சயம் சதம் அடிக்க வாய்ப்புள்ளது.

இக்கட்டான நிலை
இந்த போட்டியின் 3வது நாளான இன்று இந்திய அணி 480 ரன்களை விரட்டி விளையாடி வருகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான களமாக இருந்தாலும் முதல் இன்னிங்ஸை இன்றைக்குள் முடித்துவிட்டு, அடுத்த 2 நாட்களுக்குள் 2 இன்னிங்ஸ்களை ஆடுவது சற்று கடினமான ஒன்று தான். எனினும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications