சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய வீரர்கள் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொன்னது போல ஆமை வேகத்தில் ஆடிய நிலையில் 200 ரன்களை கூட தாண்டாமல் இந்திய அணி ஆல் - அவுட் ஆகி உள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் ரோஹித் சர்மா அணியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. பும்ராவின் தலைமையில் இந்திய அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தார்.

இந்த தொடரின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. ஒவ்வோரு பேட்ஸ்மேனும் தங்கள் இயல்பின்படி ஆடினர். ஆனால், இந்திய அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.
இந்த நிலையில், சரியாக ஆடாத கேப்டன் ரோஹித் சர்மாவை ஓரங்கட்டிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இனி யாரும் தங்கள் இயல்பின்படி ஆடக் கூடாது எனவும், தான் சொல்லும்படி தான் ஆட வேண்டும் எனவும் கூறினார். அதன்படி அனைத்து பேட்ஸ்மேன்களையும் ஆமை வேகத்தில் நிதானமாக ரன் சேர்க்குமாறு கூறி இருந்தார். ஆனால், அதன் பலனாக ஓவருக்கு 2 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்த்த இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.
இந்திய அணியின் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் 26 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தும், கே எல் ராகுல் 14 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பின் வந்த சுப்மன் கில் 64 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். விராட் கோலி 69 பந்துகளில் 17 ரன்களும் மட்டுமே எடுத்தார்.
ரிஷப் பண்ட் 12 முறை பந்தால் உடலில் தாக்கப்பட்டு, 98 பந்துகளை சந்தித்து 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரவீந்திர ஜடேஜா 95 பந்துகளை சந்தித்து 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடந்த போட்டியில் சதம் அடித்து இருந்த நிதிஷ் குமார் ரெட்டி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து சர்ச்சைக்குரிய ரிவ்யூ முறையில் கேட்ச் பிடிக்கப்பட்டதாக ஆட்டம் இழந்தார்.
அதன் பின் வந்த வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 3 ரன்களும், பும்ரா 22 ரன்களும் சேர்த்து வெளியேறினர். சிராஜ் 3 ரன்கள் எடுத்து இருந்தார். இந்திய அணி 72.2 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்களையும், ஸ்காட் போலான்ட் 20 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களையும் வீழ்த்தினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினார். நாதன் லியோன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.