சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன. அதற்கு ஏற்ப இன்று இந்திய அணியின் பயிற்சிக்கு முன்னதாக சில சம்பவங்கள் அரங்கேறின.
ரோஹித் சர்மா உடன் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் துணை கேப்டன் பும்ரா நீண்ட நேரம் பேசினர். மறுபுறம் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் பும்ராவுடன் தனியாக பேசினார். அதன் பின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பும்ராவை தனியாக அழைத்துச் சென்று நீண்ட நேரம் பேசினார்.

அதன் பின் ஸ்லிப் ஃபீல்டிங் பயிற்சி நடந்தது. பொதுவாக இந்திய அணியின் ஸ்லிப் ஃபீல்டிங்கில் ரோஹித் சர்மா முக்கியமாக இடம் பெறுவார். ஆனால், இந்த முறை அவருக்கு பதிலாக நிதீஷ் குமார் சேர்க்கப்பட்டு இருந்தார். விராட் கோலி, ஜெய்ஸ்வால் நிதிஷ் குமார், சுப்மன் கில் ஆகிய நால்வரும் ஸ்லிப் ஃபீல்டிங் பயிற்சியை மேற்கொண்டனர்.
இதன் மூலம், ரோஹித் சர்மா ஐந்தாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஸ்லிப் ஃபீல்டிங்கில் சுப்மன் கில் அல்லது நிதிஷ் குமார் ஆகியோர் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது.
ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது கேப்டன் பதவியில் இருந்து விலகினாலோ பும்ரா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார். அதை ஒட்டியே அஜித் அகர்கர் பேசினார் என்கிறது இந்திய அணி வட்டாரம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது.
அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் பார்டர் -கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு டெஸ்ட் தொடர் சமனில் முடிவடைந்தால் அதற்கு முந்தைய தொடரில் வென்ற அணி அந்த கோப்பையை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.