பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஹர்சித் ராணா நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவரது இடத்தில் ஆகாஷ் தீப்பை கொண்டு வர பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திட்டமிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் களத்தில் உள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பும்ரா மற்றும் சிராஜ் இருவருக்கும் 3வது வேகப்பந்துவீச்சாளராக விளையாடிய ஹர்சித் ராணா கொஞ்சம் கூட உதவி செய்யவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் ரன்களை தடுத்து நிறுத்தி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுத்தால், ஹர்சித் ராணா மிகவும் சாதாரண பந்தை வீசி ரன்களை வாரி வழங்கினார்.
அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மட்டும் ஹர்சித் ராணா 16 ஓவர்களில் வீசி 86 ரன்களை விட்டுக் கொடுத்தார். இவரின் எகனாமி ரேட் மட்டும் 5.40ஆக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் கொடுக்க வேண்டிய ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் வழங்கி இருக்கிறார். இதற்கு ஹர்சித் ராணாவின் அனுபவமின்மையே காரணமாக அமைந்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டை போதுமான அளவிற்கு அவர் விளையாடியதில்லை.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் லைன் மற்றும் லெந்த் எடுபடவில்லை என்றால், எப்படி மாற்றி ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று உள்ளூர் கிரிக்கெட் மூலமாக மட்டுமே அறிந்துகொள்ள முடியும். இதனால் ஹர்சித் ராணாவை 3வது போட்டியில் சேர்க்க வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தி வந்தனர். இந்த நிலையில் பிரிஸ்பேனில் நடந்த பயிற்சியில் ஹர்சித் ராணா அதிகளவில் பவுலிங் செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது.
அவரை விடவும் இளம் பவுலராக ஆகாஷ் தீப் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் பேட்டிங் பயிற்சியில் ஆகாஷ் தீப்-க்கு வழங்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதோடு, புதிய பந்தில் ஏராளமான ஸ்விங் கிடைக்கும். புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் ஆகாஷ் தீப் வல்லவராக இருந்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் ஆகாஷ் தீப் புதிய பந்தில் ஸ்விங் செய்யும் போது, சிராஜை கொஞ்சம் தாமதமாக அட்டாக்கில் கொண்டு வர முடியும். ஏனென்றால் பும்ரா மற்றும் சிராஜ் இருவரையும் ஒரே நேரத்தில் அட்டாக்கில் வைப்பதில், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் எளிதாக மற்ற பவுலர்கள் குறித்து வைத்து அட்டாக் செய்தனர். ட்ராவிஸ் ஹெட்டின் ஸ்டைலே அதுதான்.
அதேபோல் ஆகாஷ் தீப்-க்கு பழைய பந்தில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பதும் நன்றாக தெரியும். வழக்கமாக ஆஸ்திரேலியா வீரர்கள் இந்திய அணியின் புதிய வீரர்களுக்கு திணறுவார்கள். முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்சித் ராணாவுக்கு திணறியது கண்கூடாக தெரிந்தது. இதனால் காபா மைதானத்தில் ஆகாஷ் தீப் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி என்று தெரிய வந்துள்ளது.