மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் அன்று முக்கிய திருப்பம் ஏற்பட்டது. இந்திய அணி நான்காம் நாள் துவக்கத்தில் தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி விரைவாக 2 விக்கெட்களை இழந்து ரன் குவிக்க முடியாமல் திணறியது.
இந்திய அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா மற்றும் முகமது சிராஜின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து ஆடிய இந்திய அணி 369 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105 ரன்கள் முன்னிலை பெற்றது. நான்காவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கூடுதலாக 250 முதல் 300 ரன்கள் வரை எடுத்து இந்திய அணிக்கு 350 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை நிர்ணயிக்க திட்டமிட்டு இருந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 350 ரன்களுக்கு மேல் எடுத்ததால் இரண்டாவது இன்னிங்ஸிலும் அதே அளவுக்கான இலக்கை எட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 43 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. அடுத்து ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் நிறைய பந்துகளை வீணடித்தனர்.
இருவராலும் ரன் குவிக்க டியவில்லை. நீண்ட நேரம் இருவரும் ஆமை வேகத்தில் ஆடினர். இதை அடுத்து உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 25 ஓவர்களில் 53 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதாவது ஒரு ஓவருக்கு இரண்டு ரன்கள் என்ற விகிதத்தில் மட்டுமே ரன் சேர்த்து இருந்தது.
இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 13 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதன் பின் ஆஸ்திரேலிய பேட்டிங் வெகுவாக சரிந்தது. பும்ரா பந்துவீச்சில் வரிசையாக விக்கெட்களை இழந்தது ஆஸ்திரேலிய அணி.
லாபுஷேன் பல கேட்ச் வாய்ப்புகளிலும், இன்சைட் எட்ஜ்-களிலும் தப்பி 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் ஓரளவு ரன் சேர்த்தார். இதை அடுத்து 156 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. பும்ரா 4 விக்கெட்களையும், சிராஜ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.