பிரிஸ்பேன்: இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் கூறி இருக்கிறார். அதற்கு அவர் ஏற்றுக் கொள்ள முடியாத சில காரணங்களையும் கூறி இருக்கிறார். பும்ரா வேகமாக பந்து வீசவில்லை என ஒரு நகைப்புக்கு உரிய காரணத்தையும் கூறி இருக்கிறார் அக்தர்.
அனைத்து வடிவங்களிலும் 400க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி, அவர் ஏற்கனவே எல்லா காலத்திலும் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார் பும்ரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு பும்ரா முக்கிய காரணமாக இருக்கிறார்.

2018 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து, வெளிநாடுகளில் இந்தியாவின் டெஸ்ட் செயல்பாடு பெரிய அளவில் மேம்பட்டது. ஆஸ்திரேலியாவில் இந்தியா தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களை வென்றது, அதே நேரத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் சில அற்புதமான வெற்றிகளைப் பெற்றது. அதற்கு பும்ரா முக்கிய காரணம் ஆவார்.
பும்ரா வெறும் 42 டெஸ்ட் போட்டிகளில் 185 விக்கெட்களை வீழ்த்தி மிரள வைத்து இருக்கிறார். ஆனால், பாகிஸ்தானின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர், டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் செயல்பாட்டை விமர்சித்து இருக்கிறார். அக்தர் ஒரு வினோதமான கருத்தைக் கூறி, தான் பும்ராவாக இருந்தால், குறைந்த ஓவர் போட்டிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவேன் என்று கூறி இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கும் அளவிற்கு பும்ராவிடம் வேகம் இல்லை என்று அக்தர் கூறி இருக்கிறார். பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர விரும்பினால், அவர் பந்து வீசும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் சோயப் அக்தர் அறிவுறுத்தி இருக்கிறார்.
சோயப் அக்தர் பேசுகையில், "டெஸ்ட் கிரிக்கெட்டில், நீண்ட நேரம் பந்து வீச வேண்டும். பேட்ஸ்மேன்கள் உங்களைத் தாக்க முயற்சிப்பதில்லை. எனவே, லென்த் மட்டுமே போதாது. பந்து சீம் ஆகவில்லை என்றால் நீங்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுவாறுவீர்கள். நீங்கள் தடுமாறத் தொடங்கியதும், அணி நிர்வாகம் கேள்வி கேட்கத் தொடங்கும்." என்றார்.
"டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்களை வீழ்த்தும் அளவுக்கு அவர் போதுமான நல்ல வேகப்பந்து வீச்சாளர் என்று நான் நினைக்கிறேன். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் அதிக விக்கெட் வீழ்த்தவில்லை. சில சமயம் அது போல நடக்கும். ஆனால், பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டைத் தொடர விரும்பினால், அவர் தனது பந்து வீசும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். வேகத்தை அதிகரிக்கும் முயற்சியால், அவருக்கு காயம் ஏற்படும் அபாயம் அதிகம். நான் ஜஸ்பிரித் பும்ராவாக இருந்தால், குறைந்த ஓவர் போட்டிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பேன்." என்று சோயப் அக்தர் கூறினார்.
குறைந்த ஓவர் போட்டிகளில் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர் எனவும் அக்தர் கூறினார். "குறுகிய வடிவ போட்டிகளில் பும்ரா மிகவும் நல்ல வேகப்பந்து வீச்சாளர். அவர் லைன் மற்றும் லென்தைப் புரிந்துகொள்கிறார். அவரது துல்லியம் அற்புதமானது. டெத் ஓவர்களில், பவர் பிளே-வில் அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்று நான் நினைக்கிறேன். அவரால் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்ய முடியும்." என்றார் அக்தர்.
அக்தரின் பேச்சில் இரண்டு விஷயங்களை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. முதலில், பும்ரா டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசி வருகிறார். அது குறைவான வேகமா?
இரண்டாவதாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு வேகம் மட்டும் தான் முக்கியமா? ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் கிளென் மெக்ராத், இங்கிலாந்து வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் மின்னல் வேகத்தில் பந்து வீசுவதற்கு பெயர் பெற்றவர்கள் அல்ல. ஆனால், பேட்ஸ்மேன்களை திணற வைக்கும் லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசி நூற்றுக்கணக்கான விக்கெட்களை வீழ்த்தினார்கள்.