மும்பை : தைரியமான அணி தான் உலகக்கோப்பை ஜெயிக்கும். இந்திய அணி தைரியமாக ஆடவில்லை எனக் கூறி இந்திய அணி செய்த தவறை சுட்டிக் காட்டி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் முன்னாள் வீரர் கம்பீர்.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் தைரியமாக பேட்டிங் செய்யவில்லை, அப்படி ஆடி 310 ரன்கள் எடுத்து இருந்தால் இந்தியா உலகக்கோப்பை வென்று இருக்கும். மேலும், விராட் கோலி, கே எல் ராகுல் கூட்டணி அமைத்து ரன் குவிக்க 30 ஓவர்களை வீணடித்தததையும் குறிப்பிட்டு கம்பீர் விளாசி இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் 10 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்த இந்திய அணி, அடுத்த 40 ஓவர்களில் வெறும் 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ரோஹித் சர்மா 10வது ஓவரில் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பின், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - கே எல் ராகுல் விக்கெட் வீழ்ச்சியால் நிதான ஆட்டம் ஆட முடிவெடுத்தனர். ஆனால், அவர்கள் இருவரும் கடைசி வரை ரன் குவிக்க முயற்சி செய்யாமல் நிதான ஆட்டம் ஆடுவதில் மட்டுமே குறியாக இருந்தனர்.
11வது ஓவர் முதல் 40வது ஓவர் வரை வெறும் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது. இந்த நிலையில் கவுதம் கம்பீர் இந்த ஆட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உலகக்கோப்பை தோல்விக்கு காரணமே இப்படி தைரியம் இல்லாமல் ஆடியது தான் என விளாசி இருக்கிறார்.
இது பற்றி கம்பீர் பேசுகையில், "தைரியமான அணி தான் உலகக்கோப்பை வெல்லும் என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். சில சமயம் பார்ட்னர்ஷிப் அமைக்க கொஞ்ச நேரம் ஆகும். ஆனால், 11 முதல் 40வது ஓவர் வரை எடுத்துக் கொள்வது அதிகப்படியான நேரம். அந்த நேரத்தில் இந்தியா ரிஸ்க் எடுத்து ஆடி இருக்க வேண்டும்." என்றார்.
மேலும், "முதல் ஆறு, ஏழு இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி இருக்க வேண்டும். அவர்கள் 150 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், நீங்கள் 240 ரன்கள் மட்டுமே எடுத்து விட்டு அதை வைத்து போராடி வெற்றி பெறலாம் என நினைக்கிறீர்கள். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் போராட்டத்துக்கு எல்லாம் இடமே இல்லை. ஒன்று இப்படி, அல்லது அப்படி இரண்டே வழி தான் உள்ளது. என்னைக் கேட்டால் நாம் ரிஸ்க் எடுத்து ஆடி 150 ரன்களில் ஆல் அவுட் ஆகி இருக்கலாம் அல்லது எல்லாம் சரியாக வந்து 310 ரன்கள் எடுத்து இருக்கலாம். இங்கே தான் இந்தியா பின்தங்கியது. இதனால் தான் இந்தியாவால் ஐசிசி தொடர்களில் உலகக்கோப்பை வெல்ல முடியவில்லை." என்றார் கம்பீர்.
மேலும், "ரோஹித் போட்டிக்கு முன்பே தான் அவுட் ஆனாலும் மற்றவர்கள் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆட வேண்டு என்பதை கூறி இருக்க வேண்டும். விராட் கோலி ஒரு பக்கம் நங்கூரம் போட்டு நின்று ஆட, மற்றவர்கள் அதிரடி ஆட்டம் ஆடி இருக்க வேண்டும். ஒரு ஓவரில் ஐந்து சிங்கிள் ரன் எடுத்தால் கூட அது நல்ல விஷயம் தான். ஆனால், ஒரு ஓவரில் 4 - 5 டாட் பால் ஆடினால், அதை வைத்துக் கொண்டு நாம் எங்கேயும் செல்ல முடியாது." என்று கோலி, ராகுலை விளாசினார் கம்பீர்.
மேலும், "விராட் களத்தில் இருந்த போது, ராகுல் அதிரடி ஆட்டம் ஆடி இருக்கலாம். நான் அந்த ரிஸ்க்கை எடுக்கப் போகிறேன் என அவர் கூறி இருக்கலாம். நாம் அதனால் 150 ரன்களில் ஆட்டமிழந்து இருக்கலாம். ஒருவேளை அந்த ரிஸ்க்கான ஆட்டத்தால் 310 ரன்கள் எடுத்து இருந்தால் நீங்கள் உலகக்கோப்பை வென்று இருப்பீர்கள். இந்தியா தைரியமாக ஆடவில்லை. அதனால் தான் நாம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இருக்கிறோம்" என்றார் கம்பீர்.