அகமதாபாத் : இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், அதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்த சொதப்பல் ஒன்று முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்ற நிலையில் இந்திய அணிக்கு பிட்ச்கள் குறித்த தெளிவு சாதகமாக இருந்தது. அதே சமயம், போட்டிக்கு முன் பிட்ச்களில் சில மாற்றங்களை இந்திய அணி நிர்வாகம் செய்யுமாறு கூறியதாகவும், அதை செய்ததாகவும் கொல்கத்தா மற்றும் மும்பை மைதான ஊழியர்கள் பேட்டிகளில் கூறி இருந்தனர்.
மேலும், இந்தியா அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான பிட்ச்களை தானே தேர்வு செய்து கொள்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதில் ஓரளவு உண்மையும் உள்ளது. இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் மைதானத்துக்கு சென்று மைதான ஊழியர்களிடம் பிட்ச் குறித்து ஆலோசித்தார்.

இறுதப் போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்தில் பல பிட்ச்கள் இருக்கும் நிலையில், இதுவரை பயன்படுத்தப்படாத பிட்ச்சை தேர்வு செய்து அதில் போட்டி நடந்த வேண்டும் என ஐசிசி பிட்ச் ஆலோசகர் அட்கின்சன் கூறியதாகவும், ஆனால், இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ இணைந்து இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்த பிட்ச்சில் தான் இறுதிப் போட்டி நடக்க வேண்டும் என முடிவு செய்து அதை தேர்வு செய்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.
அந்த தகவல் உண்மை எனும் பட்சத்தில், அந்த பிட்ச் மிகவும் மெதுவான பிட்ச், எளிதாக ரன் குவிக்க முடியாது என்ற நிலையில் அதை ராகுல் டிராவிட் தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்வி இறுதிப் போட்டி தோல்விக்கு பின் எழுந்துள்ளது.
அந்த மெதுவான பிட்ச்சில் இந்திய வீரர்களால் முதல் இன்னிங்க்ஸில் ரன் குவிக்கவே முடியவில்லை. விராட் கோலி, கே எல் ராகுல் களத்தில் இருந்தும் அவர்களால் பெரிய அளவில் பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. அதற்கு பதிலாக இதுவரை போட்டி நடைபெறாத புதிய பிட்ச்சில் இந்தியா ஆடி இருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம்.
மேலும், ராகுல் டிராவிட் பிட்ச்களில் மாற்றம் செய்யுமாறு கூறியது ஊடகங்களில் வெளியானதால் உஷாரான ஆஸ்திரேலிய அணி பிட்ச்சுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்வதில் தீவிரம் காட்டியது. இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்த பிட்ச்சை புரிந்து கொள்வது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்த அந்த அணி தீவிரமாக அதற்காக வேலை செய்தது. போட்டி முடிந்த பின் மிட்செல் ஸ்டார்க் அது குறித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.