அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பை வென்ற நிலையில், போட்டிக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா என்ன தவறு செய்தோம் என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா எப்படி வெற்றி பெற்றது என கூறிய அவர் இந்திய அணியின் தோல்விக்கு சாக்கு சொல்ல விரும்பவில்லை என வெளிப்படையாக கூறி அதிர வைத்தார்.

அகமதாபாத்தில் நடந்த இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சேஸிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா டாஸில் வெற்றி பெற்ற போதே பல விஷயங்கள் அந்த அணிக்கு சாதகமாக அமைந்தன.
இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்யும் அணிக்கு பிட்ச் சாதகமாக மாறும் என கூறப்பட்ட நிலையில், அது அப்படியே நடந்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது பவுண்டரி அடிக்கவே கடினமாக இருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி சேஸிங் செய்த போது நிதான ஆட்டம் ஆடினாலும் அவ்வப்போது பவுண்டரி அடித்தது. மேலும், பிட்ச்சின் தன்மை மாறியதால் இந்திய பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
அது தான் போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அது குறித்து போட்டிக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, இந்த சாக்கு போக்கை சொல்ல விரும்பவில்லை. இந்திய அணி எங்கே தவறு செய்தது என வெளிப்படையாக கூறினார்.
ரோஹித் சர்மா பேசுகையில், "போட்டி முடிவு எங்களுக்கு சாதகமாக வரவில்லை. இன்று நாங்கள் சரியாக ஆடவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். ஆனால், எதுவும் சரியாக நடக்கவில்லை. இன்னும் 20 - 30 ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கோலி, ராகுல் கூட்டணி ஆடிய போது 270 - 280 ரன்கள் வரை எடுப்போம் என நினைத்தேன். ஆனால், விக்கெட்டை வரிசையாக இழந்தோம்." என்றார்.
மேலும், "240 ரன்கள் மட்டுமே வைத்துக் கொண்டு பந்து வீசும் போது நாங்கள் விரைவாக விக்கெட்களை வீழ்த்தி இருக்க வேண்டும். ஆனால், ஹெட் - லாபுஷேன் சிறப்பாக கூட்டணி அமைத்து ஆடினார்கள். எங்களை இந்தப் போட்டியில் இருந்தே வெளியேற்றி விட்டார்கள். மின் வெளிச்சத்தில் பிட்ச் சற்று நன்றாக மாறி விட்டதாக கருதுகிறேன். ஆனால், அதை ஒரு சாக்காக சொல்ல விரும்பவில்லை. நாங்கள் நிறைய ரன்கள் அடிக்கவில்லை." என தோல்விக்கான காரணம் இந்தியா ரன் குவிக்காதது தான் என வெளிப்படையாக கூறினார் ரோஹித் சர்மா.