அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா இரண்டு முக்கிய சாதனைகளை படைத்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். அதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.
முன்னதாக கேன் வில்லியம்சன் 2019 உலகக்கோப்பை தொடரில் 578 ரன்கள் குவித்து இருந்தார். அதை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா 2023 உலகக்கோப்பை தொடரில் 597 ரன்கள் குவித்து இருக்கிறார். அதன் மூலம் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா.

அடுத்து ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாராவை முந்தி நான்காம் இடத்தை பிடித்துள்ளார். உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 2278 ரன்களுடன் இருக்கிறார். அடுத்த இடத்தில் விராட் கோலி 1795 ரன்களுடன் இருக்கிறார்.
ரிக்கி பாண்டிங் 1743 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா இறுதிப் போட்டியில் 47 ரன்கள் அடித்ததன் மூலம், 1575 ரன்கள் குவித்து நான்காம் இடத்தை பிடித்துள்ளார். குமார் சங்ககாரா 1532 ரன்களுடன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். முன்னதாக விராட் கோலி 54 ரன்கள் குவித்த நிலையில், அவர் ரிக்கி பாண்டிங்கை முந்தி இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
2023 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 597 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 765 ரன்கள் குவித்து 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இதுவரை வேறு எந்த வீரரும் ஒரே உலகக்கோப்பை தொடரில் 700 ரன்களுக்கு மேல் குவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.