என்னப்பா பண்ணி வச்சுருக்கீங்க? ஆஸ்திரேலிய வீரர் என நினைத்து பைலட்டை கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்
மும்பை : ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பாவை திட்டுவதாக நினைத்து அப்பாவி ஒருவரை வெளுத்து வாங்கி இருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள் சிலர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மூன்றாவது முறையாக உலகக்கோப்பை வெல்லும் என இந்திய ரசிகர்கள் கனவில் இருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்று ஆறாவது முறையாக உலகக்கோப்பை வென்றது.
இந்த தோல்வியை எதிர்பார்க்காத இந்திய ரசிகர்கள் கடும் கோபத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு சென்று அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஜம்பா சுப்மன் கில்லை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்து இருந்தார். பும்ராவின் விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில், ஆடம் ஜம்பாவை திட்ட நினைத்த சில ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடம் ஜம்பா என்ற ஒருவரின் பக்கத்துக்கு சென்று சகட்டுமேனிக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கெட்ட வார்த்தைகளால் திட்டத் துவங்கினர்.
ஆனால், அந்த நபர் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா இல்லை. அவர் ஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த பைலட் ஆவார். அவர் ஸ்கீ எனும் பனிச் சறுக்கு விளையாட்டு வீரராகவும் இருக்கிறார். அதனால், அவர் விளையாட்டு வீரர் என்பதை மட்டுமே புரிந்து கொண்ட அந்த சில ரசிகர்கள் புகைப்படத்தில் முக ஒற்றுமை கூட இல்லை என்பதை பார்க்காமல் அவரை திட்டி இருக்கின்றனர். பின்னர் சிலர் இந்த தவறை சுட்டிக் காட்டிய போதும் புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான ஆடம் ஜம்பாவை குறி வைத்தனர்.
இது போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என பலரும் தவறான வழியில் செல்லும் ரசிகர்களை விமர்சித்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications