அகமதாபாத் : இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த நான்கு போட்டிகளில் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். அதன் பின்னணியில் ஒரு மர்மப் பெண் இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த உலகக்கோப்பை தொடரில் துவக்கத்தில் சுமாராகவே ஆடி வந்தார். ஆனால், கடைசி நான்கு போட்டிகளில் அவர் இரண்டு அரைசதம், இரண்டு சதம் அடித்து உலகக்கோப்பை தொடரில் 500 ரன்களுக்கும் மேல் குவித்து அசத்தி இருக்கிறார்.
அதிலும் கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராகவும், அரை இறுதியிலும் அவர் ஆடிய ஆட்டம் உச்சகட்டம். இந்த நிலையில் தான் அவரது இந்த திடீர் மாற்றத்துக்கு காரணமாக ஒரு பெண்ணை காட்டுகிறார்கள் ரசிகர்கள்.

இந்திய அணி தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது மற்ற வீரர்கள் தங்கள் மனைவியை அழைத்து வந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பெண்ணை அழைத்து வந்தார். அவர் பெயர் திரிஷா குல்கர்னி என கூறப்படுகிறது. அவர் ஸ்ரேயாஸ் ஐயரின் காதலி எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
அவரை முதலில் அந்த தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களில் கண்ட ரசிகர்கள் அவரைக் குறித்து சமூக ஊடகங்களில் தேடிய போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து சில ஊடகங்கள் மட்டுமே அவர் யார் என விசாரித்து அவர் பெயர் திரிஷா குல்கர்னி என்பதை மட்டும் கண்டுபிடித்து இருக்கின்றன.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், உலகக்கோப்பை முடிந்த பின் அவர் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தற்போது அவர் திரிஷா குல்கர்னி உடன் இணைந்து பயணிக்கத் துவங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் 2023 உலகக்கோப்பை தொடரில் 10 போட்டிகளில் ஆடி 526 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு சதம், மூன்று அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 128* ரன்கள் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி இந்த உலகக்கோப்பையில் 75.14 ஆக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 113 ஆக உள்ளது. இறுதிப் போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.