பிரிஸ்பேன் : ஜனவரி 19 - இந்த நாளில் தான் விராட் கோலி, பும்ரா இல்லாத இந்திய டெஸ்ட் அணி காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வெல்லவே முடியாது என சொல்லப்பட்ட நிலையில் வீழ்த்திக் காட்டியது. அந்தப் போட்டியில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் என இரண்டு தமிழக வீரர்கள் முக்கிய பங்காற்றினர்.
ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் பெருமைகளில் உலகக்கோப்பைக்கு பங்கு உள்ளது போலவே, ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணியின் பெருமைகளில் ஒன்றாக இருந்தது அந்த நாட்டின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானம். அந்த மைதானத்தில் 32 ஆண்டுகளாக ஒரு முறை கூட சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததே இல்லை என்ற நிலை 2018 வரை இருந்தது.

இந்த நிலையில் 2018 - 19இல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய அணி தன் முதல் டெஸ்ட்டில் 36 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி பெரும் சரிவை சந்தித்து இருந்தது. அதன் பின் ஒரு போட்டியை வென்றும், மற்றொரு போட்டியை டிரா செய்தும் காபா டெஸ்ட் போட்டிக்கு தயாரானது. அப்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இருந்த நிலையில் காபா டெஸ்ட்டில் வெல்லும் அணி கோப்பையை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக அப்போது உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலி விடுப்பு எடுத்துச் சென்று விட்டார். வேகப் பந்துவீச்சாளர் பும்ராவும் அணியில் இல்லை. மற்றொரு அனுபவ வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியும் இல்லை. இந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த டி20 அணியில் இடம் பெற்று இருந்த வேகப் பந்துவீச்சாளர்கள் நடராஜன், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அணியில் சேர்த்தார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அஜின்க்யா ரஹானே அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் வேறு வீரர்களை எளிதில் அணியில் சேர்க்க முடியாத சூழ்நிலையும் இருந்தது.
ஜனவரி 15 அன்று தொடங்கிய அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்கள் குவித்தது. நடராஜன், சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்குர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த போது ரோஹித் சர்மா 44 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் யாரும் 40 ரன்களை தாண்டவில்லை. அப்போது சுந்தர் ஏழாம் வரிசையில் இறங்கி 62 ரன்கள் சேர்த்து அணியை கரை சேர்த்தார். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 336 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 294 ரன்கள் குவித்தது. சிராஜ் 5 விக்கெட்களும், ஷர்துல் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 328 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கோட்டையான காபாவில், ஐந்தாவது நாளில் பேட்டிங் செய்து இந்த இலக்கை எட்டுவது சாத்தியமே இல்லை என கிரிக்கெட் உலகமே நினைத்தது.
ஆனால், இந்தியா வேறு விதமாக ஆடியது. துவக்க வீரர் சுப்மன் கில் 91 ரன்கள் குவித்தார். புஜாரா தன் வாழ்க்கையிலேயே நிதானமான இன்னிங்க்ஸ் ஆடி 211 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ரிஷப் பண்ட் ஒரு பக்கம் ரன் குவித்தார். ஒரு கட்டத்தில் இந்தியா 7 விக்கெட்களை இழந்த நிலையில் அதிரடிக்கு மாறிய ரிஷப் பண்ட் 89 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
ஆஸ்திரேலியாவின் கோட்டையான காபாவை இந்தியா அன்று தகர்த்தது. நடராஜன், சுந்தர் என இரண்டு அறிமுக வீரர்கள். ஒரே ஓரிரு போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்த நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர், சுப்மன் கில் என இளம் வீரர்களை வைத்துக் கொண்டு இந்தியஅணி அஜின்க்யா ரஹானே தலைமையில் ஜனவரி 19 அன்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியையும் பதிவு செய்தது.