பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வரும் நிலையில் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பி உள்ளார் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா வர விரும்பியதாகவும், பிசிசிஐ அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று முடிவடைந்தது. பெர்த்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் டிசம்பர் 6 அன்று நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி நடைபெற இன்னும் பத்து நாட்கள் இருக்கும் நிலையில் கவுதம் கம்பீர் அவசரமாக இந்தியாவுக்கு திரும்பி இருக்கிறார். அடிலெய்டில் நடக்க உள்ள போட்டி பகல் - இரவு டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு நாட்கள் கொண்ட பகல் - இரவு பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளது. அப்போது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய அணியுடன் இருப்பது முக்கியமான ஒன்றாகும்.
ஆனால், அவர் அப்போது அங்கு இருக்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இரண்டாவது போட்டிக்கு பத்து நாட்கள் இருப்பதால் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட வருவதற்காக கவுதம் கம்பீர் இந்தியா வந்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் அவசர சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பிசிசிஐ கம்பீரை இந்தியா வர அனுமதி அளித்து இருக்கிறது
முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் இரண்டாவது போட்டியில் பங்கேற்பது உறுதியாகி இருக்கிறது.