அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம் பெற்றார். இதன் பின்னணியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உடனான 15 நிமிட சந்திப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய உத்தேச அணியில் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் இடம் பெற்று இருந்த போதும் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா மண்ணில் சுழற் பந்துவீச்சுக்கு பெரிய அளவில் வேலை இருக்காது என்பதால் மற்றொரு சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்று இருந்தார்.

வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும் ஓரளவு ரன் சேர்ப்பார் என்பதால் அவர் அணியில் சேர்க்கப்பட்டார். அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சிப் போட்டி நடைபெற்றது. அதிலும் அஸ்வினுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அவர் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை.
இதை அடுத்து அஸ்வினுக்கு இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என அனைவரும் நினைத்து இருந்தனர். இந்த நிலையில், அஸ்வின் அதிரடியாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு பயிற்சியாளர் கம்பீர் மற்றும் அஸ்வின் இடையே நடந்த ஒரு சம்பவம் தான் இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நீண்ட நேரம் விவாதத்தில் ஈடுபட்டனர். அதன் முடிவில் கவுதம் கம்பீர் அஸ்வின் அருகே வந்தார். அஸ்வின் தோள் மீது கை போட்ட கவுதம் கம்பீர் அவருடன் 15 நிமிடங்கள் தீவிரமாக பேசினார்.
அதன் முடிவில் அஸ்வின் நேராக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இந்த நிலையில் தான் வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து நீக்கப்பட்டு, அஸ்வின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஏன் குறிப்பாக அஸ்வினை விளையாட வைக்க வேண்டும்? என்பது பற்றி இந்திய அணி வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளது.
அடிலெய்டு மைதானத்தில் அஸ்வின் மூன்று போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவரது சராசரி ஒரு ஓவருக்கு 2.64 என்பதாக உள்ளது. இது மிகவும் சிறந்த பந்து வீச்சு செயல்பாடு ஆகும். ஆஸ்திரேலியாவில் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் அடிலெய்டு மைதானத்தில் மட்டும் நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார்.
மேலும், 2020 ஆம் ஆண்டு அடிலெய்டு மைதானத்தில் நடந்த பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி தோல்வி அடைந்த நிலையில், அந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அஸ்வின் தான். அந்தப் போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அஸ்வின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.